நாகர்கோவிலில் வக்கீல்கள் போட்டி போட்டு ஆர்ப்பாட்டம் வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு, ஆதரவு கோஷங்களால் பரபரப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக குமரி மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் நாகர்கோவில் வக்கீல் சங்கம் சார்பில் கோர்ட்டு அருகே பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதாவது வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு வக்கீல் சங்க தலைவர் மரிய ஸ்டீபன் தலைமை தாங்கினார். கூட்டு நடவடிக்கை குழு பொருளாளர் மகேஷ், வக்கீல் சங்க செயலாளர் டி.கே.மகேஷ், பொருளாளர் விஸ்வராஜன், துணை தலைவர் பிரதாப், நூலகர் செந்தில் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்ட பா.ஜனதா வக்கீல் பிரிவு சார்பில் நாகர்கோவிலில் உள்ள கோர்ட்டு முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு எம்.இ.அப்பன் தலைமை தாங்கினார். வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் விஜயபிரசாத், பா.ஜனதா துணை தலைவர் ஜெகநாதன், ஆறுமுகம், அருள்சிவா, ரசல்ராஜ், பலவேசமுத்து உள்பட பலர் கலந்து கொண்டு வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

ஒரே நேரத்தில் அருகருகே 2 இடங்களில் வக்கீல்கள் போட்டி போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஒரு பிரிவினர் வேளாண் சட்டத்துக்கு எதிராகவும், ஒரு பிரிவினர் ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பியதால் கோர்ட்டு பகுதி பரபரப்பாக காணப்பட்டது. வக்கீல்கள் போராட்டம் காரணமாக ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Leave a Reply