8 மாதங்களுக்கு பின் சென்னை மெரினா கடற்கரையில் இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி..!

கொரோனா அச்சம் காரணமாக கடந்த 8 மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டிருந்த சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகள், இன்று முதல் திறக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக, நடைமேடையில் இடநெருக்கடியுடன் நடைப் பயிற்சி மேற்கொண்டதாகவும், இனி வழக்கம் போல் சுதந்திரமாக பயிற்சி மேற்கொள்ள இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் ஒருபகுதியாக சென்னையின் அடையாளமான மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால் காலை, மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொள்வோர், உடற்பயிற்சி செய்வோர் மெரினா கடற்கரைக்கு செல்ல முடியாத நிலை உருவானது. இதனை தொடர்ந்து படிப்படியாக தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு, டிசம்பர் 14ம் தேதி முதல் சென்னை மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளித்தது.

எட்டு மாதங்களுக்கு பிறகு மெரினா கடற்கரைக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பல மாதங்கள் கழித்து மெரினா கடற்கரைக்கு அனுமதி வழங்கப்படுவதால் தூய்மைப்படுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்றது. மணற்பரப்பு, சர்வீஸ் சாலை உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். கடற்கரையில் உள்ள பொதுக்கழிவறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு, தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டது.

கடந்த சில மாதங்களாக, நடைமேடையில் இடநெருக்கடியுடன் நடைப் பயிற்சி மேற்கொண்டதாகவும், இனி வழக்கம் போல் சுதந்திரமாக பயிற்சி மேற்கொள்ள இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் அனுமதிக்கப்பட்டாலும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் மெரினாவுக்கு வந்து செல்வது மகிழ்ச்சிதான் என, மக்கள் கூறுகின்றனர்.

Leave a Reply