8 மாதங்களுக்கு பிறகு குமரியில் இன்று கல்லூரிகள் திறப்பு…!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் பாடம் கற்று வந்தனர்.

இந்த நிலையில் 2-ம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு மற்றும் இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்கு 7-ந் தேதி (அதாவது இன்று) முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் கலை மற்றும் அறிவியல், என்ஜினீயரிங், வேளாண்மை, கால்நடை கல்லூரிகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளது.

குமரி மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகளை திறக்க பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. எனவே அனைத்து கல்லூரிகளும் இன்று திறக்கப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் கற்பிக்கப்படும். இறுதியாண்டு மாணவர்கள் மட்டும் கல்லூரிக்கு செல்வதால் கல்லூரிகளில் இடநெருக்கடி இருக்காது.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வசதியாக இருக்கும். மேலும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே கல்லூரிகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றன.

Leave a Reply