நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது…!

உலக பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித சவேரியார் பேராலயமும் ஒன்று. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாள் திருவிழா நவம்பர் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 3-ந் தேதி வரை கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மாலை 6.30 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் கிலேரியஸ் தலைமை தாங்கி கொடியை ஏற்றி வைத்தார். அதன்பிறகு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் கோட்டார் வட்டார முதன்மை அருட்பணியாளர் மைக்கிள் ஏஞ்சலுஸ், பங்குத்தந்தை ஸ்டான்லி சகாயசீலன், இணை பங்குத்தந்தை ஜார்ஜ் கபிரியேல் கிஷோர், பேராலய அருட்பணி பேரவை நிர்வாகிகள் அந்தோணி சவரிமுத்து, திலகராஜ், ஆஸ்டின், செலுக்கஸ் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலி, மறையுரை நடைபெறுகிறது. வருகிற 1-ந் தேதி மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். அதன்பிறகு இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து கும்பிடு நமஸ்காரம் நேர்ச்சை செய்வார்கள்.

2-ந் தேதி மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறும். அன்றைய தினமும் இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.

விழாவின் இறுதி நாளான 3-ந் தேதி காலை 6 மணிக்கு புனித சவேரியாரின் பெருவிழா திருப்பலி, 8 மணிக்கு மலையாள திருப்பலி, 11 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலி ஆகியவை நடக்க உள்ளன. விழா ஏற்பாடுகளை பங்கு பேரவை நிர்வாகிகள் செய்துள்ளனர்.திருவிழாவையொட்டி கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சவேரியார் பேராலய பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Leave a Reply