மதம் மாறிய ஆதி திராவிடர்களின் சான்றிதழ்களை ரத்து செய்ய பா.ஜ.க கோரிக்கை

குமரி மாவட்ட பா.ஜ.க, எஸ்.சி. அணி செயற்குழு கூட்டம் மண்டைக்காட்டில் நடந்தது.மாவட்ட எஸ்.சி. அணி தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர்கள் சுரேஷ், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் ஐயப்பன் வரவேற்று பேசினார்.

மாநில செயலாளர் உமாரதி ராஜன் கலந்து கொண்டார். மாவட்ட பா.ஜ.க, தலைவர் தர்மராஜ், அகில பாரத பொதுக்குழு உறுப்பினர் காந்தி, கோட்ட பொறுப்பாளர் கிருஷ்ணன், மாவட்ட துணைத்தலைவர் லீலாபாய், எஸ்.சி.அணி பார்வையாளர் விசு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்து ஆதி திராவிடர் என்று சான்றிதழ் வாங்கிவிட்டு மதம் மாறி சென்றவர்களின் சான்றிதழை அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும், குமரி மாவட்டத்தில் இந்து ஆதி திராவிடர்கள் சான்று கேட்டு விண்ணப்பிக்கும்போது முறையான விசாரணை நடத்தி நிரந்தர அட்டையில் சான்று வழங்க கேட்பது எனவும்,

ஆதி திராவிடர் காலனியில் பட்டாதாரர் இறந்த பின்பு வாரிசுதாரர்களுக்கு பட்டா பெயர் மாற்றம் செய்து கொடுக்க கேட்டும், எஸ்.சி.இன மக்கள் நீட், ஜெ.இ.இ.போன்ற தேர்வுகளை எதிர்க்கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இலவச சிறப்பு பயிற்சி அளிக்க அரசை கேட்பது,

இந்து ஆதி திராவிடர்களின் இட ஒதுக்கீடை முஸ்லீம், கிறிஸ்தவர்களுக்கும் வழங்க கூறி இந்து ஆதி திராவிடர்களின் சலுகைகளை பறிக்க நினைக்கும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளனை கண்டிப்பது எனவும், பிரதமர் மோடியின் உருவ படத்தை அனைத்து அரசு அலுவலகங்களிலும் வைக்க கேட்பது எனவும் வலியுறுத்தப்பட்டது. குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய எஸ்.சி.அணி தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.

Leave a Reply