மேம்பாலம் அமைக்க கோரி 11-ந் தேதி மறியல் ஆஸ்டின் எம்.எல்.ஏ. அறிவிப்பு…!

கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ. ஆஸ்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குலசேகரன்புதூர் சந்திப்பு மற்றும் தேவசகாயம் மவுண்ட் சந்திப்பில் நான்கு வழி சாலையில் மேம்பாலம் அமைக்கப்படாததால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

நான்கு வழி சாலை அமைக்க கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரையும், காவல்கிணறு முதல் பார்வதிபுரம் வரையும் ஏராளமான விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. இவர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்காமல் 10 ஆண்டுகளாக தேசிய நெடுஞ்சாலைத்துறை காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, விரைவில் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன் புதூர், ஈசாந்தி மங்கலம், நாவல்காடு போன்ற பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இவற்றுக்கு மண் எடுக்க அரசு தடை விதித்துள்ளதால் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, செங்கல்சூளைகளுக்கு பட்டா நிலத்தில் இருந்து மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 11-ந் தேதி (புதன்கிழமை) காலை 8 மணிக்கு ஆரல்வாய்மொழி பகுதியில் கவன ஈர்ப்பு மறியல் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply