முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குமரிக்கு நாளை வருகிறார்…!

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக நாளை (10.11.2020) (செவ்வாய்க்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வர உள்ளார்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று எண்ணற்ற பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து குமரி மாவட்டத்தில் முடிவடைந்துள்ள பல்வேறு திட்ட பணிகளையும், புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கலெக்டர் அலுவலகத்தில் விழா மேடை அமைப்பதற்காக ஏற்கனவே பந்தல் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அங்கு இன்னும் மேடை மட்டுமே அமைக்க வேண்டி இருக்கிறது. ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ள வருவாய் கூட்டரங்கில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தில் ஒரு நுழைவு வாயில் மட்டும் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. எனவே லூயி பிரெய்லி கட்டிடம் அருகே உள்ள கழிவறை பக்கம் இருக்கும் காம்பவுண்டு சுவரை இடித்து நுழைவு வாயில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து அந்த காம்பவுண்டு சுவரை இடித்து அகற்றும் பணி நேற்று நடந்தது. பின்னர் அங்கு நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. இந்த நுழைவு வாயில் வழியாக அரசு ஊழியர்கள், நலத்திட்ட உதவிகள் பெறுவோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓய்வு எடுக்க இருக்கும் அரசு விருந்தினர் மாளிகையும் சுத்தம் செய்யப்பட்டு உள்ளது.அதோடு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

கலெக்டர் அலுவலகம் முழுவதும் ஏற்கனவே மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது. விழா நடைபெறும் இடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. அரசு விருந்தினர் மாளிகை மற்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் வழிகளில் முக்கிய சந்திப்பு உள்ளிட்ட இடங்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

கலெக்டர் அலுவலகம், அரசு விருந்தினர் மாளிகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட தொடங்கி உள்ளனர். முன்னதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசார் அனைவருக்கும் நேற்று ஆயுதப்படை மைதானத்தில் வைத்து கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நேற்று முன்தினமே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply