தோவாளை அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தை தளவாய்சுந்தரம் பார்வையிட்டார்

குமரி மாவட்டம் அழகியபாண்டியபுரம் பேரூராட்சி உள்ளிட்ட 8 பேரூராட்சிகள், அகஸ்தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம் ஆகிய யூனியன்களுக்கு உட்பட்ட 246 கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.109 கோடியே 79 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக தோவாளை அருமநல்லூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நாளை (செவ்வாய்க்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் தொடங்கி வைக்கிறார்.

இந்த நிலையில் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், தோவாளை அருமநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையம் மற்றும் நீர் பகிர்மான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படவுள்ள குடிநீரின் தன்மை குறித்தும், குடிநீர் வினியோகம் குறித்தும் கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) கதிரேசன், உதவி செயற்பொறியாளர்கள் சங்கர், கோபாலகிருஷ்ணன், ராஜன், உதவி பொறியாளர் சதீஷ்குமார், தோவாளை யூனியன் துணைத்தலைவர் ஷேக் உள்பட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply