சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடன் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர்

சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடன் தொகை வழங்கப்படுவதாகவும் பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை தேடி நகர்புற பகுதிகளுக்கு செல்வதை தடுக்கவும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சுயதொழில் தொடங்கி தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதன் மூலம் ஊரக வேலைவாய்ப்புகளை பெருக்கவும் தமிழக அரசு மானியத்துடன் கூடிய பல்வேறு கடன் திட்டங்களை மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தி வருகிறது.

அதன்படி“ படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்“ கடந்த 2010-11-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டு உச்சவரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வழங்கப்படும் மானியத்திற்கான உச்சவரம்பும் ரூ.1.25 லட்சத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை 25 சதவீதம் மானியத்துடன் கடன் பெறலாம்.

மேலும், தமிழக அரசின் மற்றொரு சிறப்பு திட்டமான “புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்“ ஆகும். இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியத்திற்கான உச்சவரம்பு கடந்த 3-ந்தேதி முதல் ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டு திட்டங்களிலும் அடுத்த ஆண்டு (2021) மார்ச் மாதம் 31-ந்தேதி வரை பயனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சியில் இருந்து அரசால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த திட்டத்தில் கடன்பெற விரும்பும் இளைஞர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp மற்றும் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply