நாகர்கோவில் மாநகராட்சியில் பழுதான அனைத்து சாலைகளையும் சீரமைக்காவிட்டால் போராட்டம் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. அறிக்கை

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் இருந்து சில வார்டுகளில் சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் மோசமான சாலைகளால் போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது. பள்ளி- கல்லூரிகளை திறக்க அரசு திட்டமிட்டு உள்ளதால் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகள், 52 வார்டுகளிலும் உள்ள தெருச்சாலைகள் அனைத்தையும் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு முன்பாக சீரமைக்க வேண்டும்.

குறிப்பாக செட்டிகுளத்தில் இருந்து சவேரியார் ஆலயம் செல்லும் சாலையை விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மின்கம்பங்களை சாலை ஓரத்துக்கு மாற்றி அமைக்க வேண்டும். இதுபோல ராமன்புதூர் முதல் குருசடி வரையுள்ள சாலை, கிருஷ்ணன் கோவில் முதல் பார்வதிபுரம் வரை உள்ள சாலை மிக மோசமாக உள்ளது.

முதல்-அமைச்சர் குமரி மாவட்டம் வருகை தர இருப்பதையொட்டி அவர் வந்து செல்லும் பாதைகளில் உள்ள சாலைகளை மட்டும் சீரமைக்காமல், அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும். இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை எனில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சியை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply