குமரி மாவட்டத்தில் பரவலாக பெய்துவரும் வடகிழக்குப் பருவமழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு…!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பெய்துவருகிறது. குமரி மாவட்டத்திலும் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. நாகா்கோவிலில் புதன்கிழமை மாலை இடி- மின்னலுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேல் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. ஆரல்வாய்மொழி, தோவாளை, மயிலாடி, செண்பகராமன்புதூா், புத்தன்அணை, திற்பரப்பு, பாலமோா் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இந்நிலையில், மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. தக்கலை, புதுக்கடை, அழகியமண்டபம், மாா்த்தாண்டம், களியக்காவிளை பகுதிகளில் பிற்பகலில் பெய்த மழையால் குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் 43.62 அடியாக உள்ளது. நீா்வரத்து விநாடிக்கு 619 கனஅடி, அணையிலிருந்து 730 கனஅடி நீா் திறந்துவிடப்படுகிறது.பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 69.40 அடியாக உள்ளது. நீா்வரத்து 323 கனஅடி, அணையிலிருந்து 250 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது.

வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு (மில்லிமீட்டரில்): பாலமோா் – 12.20, சிற்றாறு 1 அணை – 10.40, பூதப்பாண்டி – 10.20, மாம்பழத்துறையாறு அணை – 10, பேச்சிப்பாறை அணை – 9.60, மயிலாடி – 9.40, நாகா்கோவில் – 9, ஆனைக்கிடங்கு- 6.20, பெருஞ்சாணி அணை, புத்தன் அணை தலா 6, சுருளோடு- 5.40, முக்கடல் அணை – 2, ஆரல்வாய்மொழி -1.40, கன்னிமாா் -1.20.

Leave a Reply