குமரி மீனவர்கள் 10 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மீனவர்களின் குடும்பத்தினர், கலெக்டர் அலுவலகத்தில் மனு

தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் சர்ச்சில் தலைமையில் கர்நாடக மாநிலத்தில் சிறை பிடிக்கப்பட்டுள்ள 10 குமரி மீனவர்களின் குடும்பத்தினர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

குமரி மாவட்டம் பிள்ளைத்தோப்பைச் சேர்ந்த ராபின்சன்(வயது 36), கன்னியாகுமரியைச் சேர்ந்த டென்னிஸ் (56), வாவத்துறையைச் சேர்ந்த அருள்ராஜ் (42), மணக்குடியை சேர்ந்த ஜோசப் (50), அழிக்காலைச் சேர்ந்த அருள்சீலன் (40), கடியபட்டினத்தைச் சேர்ந்த சுபின்(20), இவருடைய தம்பி பிரவின் (18), முட்டத்தை சேர்ந்த ரோஹன் டிஜோ (18), பெரியவிளையைச் சேர்ந்த சாமுவேல் (18), எறும்புகாட்டைச் சேர்ந்த சக்கரியா (27) ஆகிய 10 மீனவர்களும் கேரளாவில் உஸ்மான் என்பவருக்கு சொந்தமான “இந்தியன்“ என்ற விசைப்படகில் கடந்த 19-ந் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வேப்பூர் பகுதியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்கள்.

மீனவர்கள் கர்நாடக மாநிலம் மால்பே என்ற பகுதியில், அதாவது ஆழ்கடலில் சுமார் 23 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்த போது 22-ந் தேதி கர்நாடக மீனவர்கள் 10 படகுகளில் சென்று ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை கடலுக்குள் சுற்றிவளைத்துப் பிடித்துள்ளனர்.

மேலும் படகில் இருந்த தமிழக மீனவர்களை கடுமையாக ஆயுதங்களோடு தாக்கி காயப்படுத்தியுள்ளனர். படகு ஓட்டுனர் ராபின்சன் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். சக மீனவர்களும் அவர்களால் தாக்கப்பட்டனர். பின்னர் விசைப்படகுடன் அவர்கள் 10 பேரையும் பிணைக்கைதிகளாக மால்பே பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 10 மீனவர்களும் மால்பேயில் உள்ள கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். குமரி மீனவர்கள் காயம் அடைந்திருந்ததால் அவர்களை உடுப்பி சட்டம்-ஒழுங்கு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குமரி மீனவர்கள் 10 பேரும் ஆயுதங்களோடு கர்நாடக மாநில மீனவர்களை தாக்கியதாக அவர்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்துள்ளனர். கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி உடுப்பி சிறையில் அடைத்துள்ளனர். மீனவர்களை தங்களது உறவினருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்குகூட அனுமதிக்கவில்லை. இது குமரி மாவட்ட மீனவர்கள் குடும்பத்தினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அவர்களுக்கு போதுமான மருத்துவ வசதி கிடைக்கவில்லை. கொரோனா நோய்த்தொற்று பரவியுள்ள இந்த நேரத்தில் குமரி மீனவர்களை கர்நாடக மாநில சிறையில் அடைத்திருப்பது வேதனைக்குரியதாக இருக்கிறது.

குமரி மீனவர்கள் கர்நாடக மாநில எல்லைக்குள் மீன்பிடிக்கவில்லை. அவர்கள் தேசிய கடல் பகுதியில் மீன்பிடித்ததாகத்தான் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் குமரி மீனவர்களுக்கு தொடர்ந்து உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேலும் விசைப் படகில் இருந்த மீன்களையும் மற்றும் ஜி.பி.எஸ்., எக்கோ சவுண்டர், வயர்லெஸ், செல்போன் போன்ற விலையுயர்ந்த பொருட்களையும் கர்நாடகா மீனவர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.

எனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 குமரி மீனவர்களையும் விரைந்து விடுவிக்க தமிழக அரசு, கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மீனவர்களுக்கு ஆழ்கடலில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். தேசிய கடல் பகுதியில் அனைத்து மீனவர்களுக்கும் மீன் பிடிப்பதற்கு உரிமைப்பட்ட பகுதி என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதே கோரிக்கை மனுக்கள் தமிழக முதல்-அமைச்சருக்கும், கர்நாடக முதல் -மந்திரிக்கும், மத்திய மீன்வளத்துறை மந்திரிக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக மீனவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Leave a Reply