குமரி பா.ஜனதா மகளிர் அணி சார்பில் தொல். திருமாவளவனை கண்டித்து நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பெண்கள் குறித்தும், மதம் சம்பந்தமாகவும் அவதூறு பேசியதாக பா.ஜனதாவினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே தொல்.திருமாவளவனை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பா.ஜனதா சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதே போல குமரி மாவட்ட பா.ஜனதா மகளிர் அணி சார்பில் தொல்.திருமாவளவனை கண்டித்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மகளிர் அணி மாவட்ட தலைவி மகேஷ்வரி தலைமை தாங்கினார். நாகர்கோவில் நகரசபை முன்னாள் தலைவர் மீனாதேவ், உமாரதி உள்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

ஆனால் முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனினும் தடையை மீறி பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அனைவரையும் நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு வேணுகோபால், இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி மற்றும் போலீசார் கைது செய்தனர். அந்த வகையில் மொத்தம் 96 பேர் கைது செய்யப்பட்டு ராமன்புதூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் மதியத்துக்கு பிறகு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

போலீஸ் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்ததால் கலெக்டர் அலுவலகம் முன் பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Leave a Reply