அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கவர்னர் ஒப்புதல் அளிக்காதது வருத்தத்தை தருகிறது: கே.எஸ். அழகிரி

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் எல்லோரும் சொன்ன பிறகும் தமிழக கவர்னர் ஒப்புதல் அளிக்காதது வருத்தத்தை தருகிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

மறைந்த கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஹெச்.வசந்தகுமார் நினைவிடம் உள்ள அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார் இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் எல்லோரும் சொன்ன பிறகும் கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுப்பது வேதனை அளிக்கிறது என்று கூறினார்.

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் முயற்சி போதுமானதாக இல்லை. அரசு மருத்துவமனையில் சுகாதார கேடு காரணமாக யாரும் போவதில்லை. தனியார் மருத்துவமனைகளில் கொள்ளை நடக்கிறது. இதை தமிழக அரசு தட்டிக் கேட்கவில்லை. தமிழகத்தில் மணல் கொள்ளை அரசின் உதவியுடன் நடக்கிறது நீதிமன்றம் கண்டித்த பிறகும் தொடர்கிறது.

குஷ்பு வெளியேறியதால் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு அல்ல குஷ்புவுக்கு தான் பின்னடைவு. தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சிகளுக்கு பிஜேபி தடையாக உள்ளது. நீட் தேர்வை பொறுத்தவரை மத்திய அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் வெற்றி பெற முடிகிறது தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வெற்றி பெற முடியவில்லை எனவே தமிழ் நாட்டில் நீட் தேர்வில் இருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அவர் கூறினார்.

Leave a Reply