மாவட்ட கல்வி அதிகாரிகள் தேர்வு இறுதி மதிப்பெண் பட்டியலில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் முதல் இடம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்(டி.என்.பி.எஸ்.சி.) கல்வித்துறையில் 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் காலியாக இருந்த 20 மாவட்ட கல்வி அதிகாரி பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பலர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த பதவிக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு(2019) மார்ச் மாதம் 2-ந்தேதி நடந்தது. அந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தக்கட்டமாக நடைபெறும் முதன்மை தேர்வு எழுத தகுதியுள்ளவர்கள் ஆவார்கள். அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை முதன்மை தேர்வு நடத்தப்பட்டது.

இதற்கிடையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கால் டி.என்.பி.எஸ்.சி. அனைத்து தேர்வு முடிவுகளையும் வெளியிடாமல் இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகளை வெளியிட்டு வருகிறது.

அந்தவகையில் முதன்மைத் தேர்வு அடிப்படையில் நேர்காணலுக்கு தகுதி பெற்றவர்களின் விவரங்கள் கடந்த 8-ந்தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி 20 மாவட்ட கல்வி அதிகாரி பதவிகளுக்கு 47 பேர் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கான நேர்காணல் தேர்வு நேற்று நடைபெற்றது.

நேர்காணல் தேர்வு முடிந்ததும், முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடங்கிய இறுதி மதிப்பெண் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. நேற்று இரவே வெளியிட்டது.

அதில், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் குழிவிளையை சேர்ந்த ஷெர்லின் விமல்(வயது 26) என்பவர் 643.75 மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பெற்று இருக்கிறார். இவர் ஏற்கனவே குரூப்-2 ஏ தேர்வில் வெற்றி பெற்று கல்வித்துறையில் உதவியாளராக பணிபுரிந்து, அதன்பிறகு குரூப்-2(நேர்காணல்) தேர்வில் வெற்றிபெற்று முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், இறுதி மதிப்பெண் பட்டியலில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சூசைமரியநாதன் என்பவர் 3-வது இடத்தையும்(பிற்படுத்தப்பட்டோர் பிரிவில்), ஈரோட்டை சேர்ந்த ராஜூ 4-வது இடத்தையும்(மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில்) பெற்றுள்ளனர். இவர்களில் ராஜூ என்பவர் கூலித்தொழிலாளியின் மகன் ஆவார். சூசை மரியநாதனின் தந்தை மின்சார வாரியத்தில் பணிபுரிகிறார்.

இதுகுறித்து முதல் மதிப்பெண் பெற்ற ஷெர்லின் விமல் கூறுகையில், ‘என்னுடைய குடும்பத்தினர் கல்வித்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். தந்தை ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர், தாயார் தற்போது ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அந்தவகையில் நானும் தற்போது கல்வித்துறையில் சேவை புரிய போகிறேன். மதிப்பெண் பட்டியலில் முதல் இடத்துக்கு வந்தது ரொம்ப மகிழ்ச்சி.’ என்றார்.

Leave a Reply