விரிகோடு பகுதியில் விளைநிலம் வழியாக ரயில்வே மேம்பாலம் அமைக்க ஆய்வு:பொதுமக்கள் முற்றுகை…!

மார்த்தாண்டம் கருங்கல் ரோட்டில் விரிகோடு பகுதி வழியாக ரயில்வே லைன் செல்கிறது. இந்த ரயில்வே லைனில் பயணிகள் ரயில், சரக்கு ரயில் என ஏராளமான ரயில்கள் சென்று வருகின்றன. ரயில்கள் செல்லும் நேரம் விரிகோடு ரயில்வே லெவல் கிராசிங்கில் கேட் மூடப்படும். இதனால், அப்பகுதியில் ரோட்டின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்பது வழக்கம்.

இதனால், அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், ரயில்வே லெவல் கிராசிங் அமைந்துள்ள பகுதி வழியாக மேம்பாலம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், திடீரென லெவல் கிராசிங் பகுதி வழியாக மேம்பாலம் அமைக்கப்படாமல், வேறு பகுதி வழியாக மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

அப்பகுதி வழியாக மேம்பாலம் அமைக்கப்பட்டால் விளைநிலங்கள் மற்றும் வீடுகள் பாதிக்கப்படும் என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பத்மனாபபுரம் சப் கலெக்டர் சரண்யா அறி மற்றும் அதிகாரிகள் நேற்று மார்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியில் மேம்பால பணிகளை ஆய்வு செய்ய வந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் அங்கு வந்த பொதுமக்கள் சப்-கலெக்டர் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு விளைநிலங்கள் வழியாக மேம்பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்போது உள்ள லெவல் கிராசிங் அமைந்துள்ள பகுதி வழியாக மேம்பாலம் அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் கேட்டறிந்து பாதிப்பில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply