தீபாவளி பண்டிகையையொட்டி கோ-ஆப்டெக்சில் ரூ.3¾ கோடி விற்பனை இலக்கு கலெக்டர் தகவல்…!

நாகர்கோவில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகைக்கான தள்ளுபடி சிறப்பு விற்பனை தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே குத்து விளக்கேற்றி விற்பனையை தொடங்கி வைத்தார். முதல் விற்பனையை கருங்கல் வட்டார கல்வி அலுவலர் சந்திரமதி பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசும் போது கூறியதாவது:-

இந்தியாவில் உள்ள கைத்தறி நிறுவனங்களில் முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் திகழ்கிறது. இதற்கு நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் பேராதரவும்தான் முக்கிய காரணங்களாகும். நெல்லை மண்டலத்தில் 2019-2020 ஆண்டில் மொத்த விற்பனை ரூ. 20 கோடி அளவிற்கு நடந்துள்ளது. இதில், தீபாவளி பண்டிகையின் போது மட்டும் ரூ.11.05 கோடி அளவில் விற்பனை நடந்துள்ளது.

நடப்பு ஆண்டிற்கு (2020) நெல்லை மண்டல அளவில் தீபாவளி பண்டிகைக்கு ரூ.12 கோடி விற்பனை குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் 30 சதவீதம் தள்ளுபடி விலையுடன் ரூ.3.40 கோடி அளவிற்கு விற்பனை நடந்தது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.3¾ கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் கோ-ஆப்டெக்சில் கடந்த தீபாவளிக்கு ரூ.2.22 கோடி அளவிற்குவிற்பனை ஆனது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.2.40 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது வழங்கப்பட்டு வரும் 30 சதவீதம் சலுகையானது பொங்கல் பண்டிகை வரை வழங்கப்படும். இதனை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெண்கள் விரும்பும் மென்பட்டுச் சேலைகள், சுபமுகூர்த்த பட்டு சேலைகள், ஆர்கானிக் சேலைகள், பருத்தி சேலைகள், காட்டன் சேலைகள், படுக்கை விரிப்புகள், சுடிதார் ரகங்கள், ரெடிமேட் சட்டைகள், வேட்டிகள், கைலிகள் ஆகியவை நவீன டிசைன்களில் உற்பத்தி செய்யப்பட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு புதிய வரவாக மதுரை காட்டன் சேலைகள், காதா சேலைகள், காதா பெட்சீட் ரகங்கள், சம்பரே பெட்சீட் ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும், வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், கனவு நனவு சேமிப்பு திட்டமும் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தில் சேர்ந்து வாடிக்கையாளர்கள் 56 சதவீதம் கூடுதல் பயனுடன் கைத்தறி துணிகள் வாங்கி பயனடையலாம்.

தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, விதிமுறைகளுக்கு உட்பட்டு இரவு 8 மணி வரை வர்த்தக நிறுவனங்கள் செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் (திருநெல்வேலி) இசக்கிமுத்து, குமரி கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் பத்மராஜ், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply