அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணியினர் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ், ஆஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தை பிரித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்ல முயற்சிக்கும் அதன் துணைவேந்தர் சூரப்பாவை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இதேபோல் குமரி மாவட்ட தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் நாகர்கோவில் கோணத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாணவரணி கிழக்கு மாவட்ட அமைப்பாளர் சதாசிவம், இளைஞர் அணி கிழக்கு மாவட்ட அமைப்பாளர் சிவராஜ், மேற்கு மாவட்ட அமைப்பாளர் ததேயு பிரேம்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ., ஆஸ்டின் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-

அண்ணா பல்கலைக்கழகம் பழமை வாய்ந்த பல்கலைக்கழகம் ஆகும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அதனை, சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்ல முயற்சி நடந்து வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில்தான் கணிதமேதை ராமானுஜம், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் படித்தனர். இந்த பல்கலைக்கழகத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றும்போது கல்விக் கட்டணம் உயரும். கிராமப்புற மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு குறைந்துவிடும்.

இதனால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தை பொறுத்தவரை தற்போது 13 பல்கலைக்கழகங்கள், 98 கலை- அறிவியல் கல்லூரிகள், 39 உறுப்பு கல்லூரிகள், 161 அரசு உதவி பெறும் கல்லூரிகள் என 300-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லக்கூடாது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் எதிர்ப்பு தெரிவித்து பேசினார். இந்த நிலையில் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு அண்ணா பல்கலைக்கழகத்தை கொண்டு செல்ல முயற்சி நடந்து வருவது கண்டனத்துக்கு உரியது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன், கலை-இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில செயலாளர் தில்லைச் செல்வம், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், மாநகர செயலாளர் மகேஷ், நிர்வாகிகள் ஷேக்தாவூது, எம்.ஜே.ராஜன், சுரேந்திரகுமார், இளைஞரணி நிர்வாகிகள் ராஜேஷ்குமார், பூதலிங்கம், சோமு, சங்கர், சந்திரசேகர், பிரேம் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply