பேச்சிப்பாறை அணையை கட்டிய அலெக்சாண்டர் மிஞ்சின் பிறந்த நாள் விழா…!

குமரி மாவட்டத்தின் நீராதாரமாக விளங்கும் பேச்சிப்பாறை அணை திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த அணை கட்டுவதில் ஆங்கிலேய பொறியாளரான ஹம்பரே அலெக்சாண்டர் மிஞ்சின் முக்கிய பங்காற்றினார். பொதுமக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற இவர் இங்கிலாந்தில் 1868-ம் ஆண்டு அக்டோபர் 8-ந்தேதி பிறந்தார். 1913-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இவருடைய கல்லறை அணையின் கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

தன்னலமற்ற சேவையை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் விவசாயிகள், அரசியல் கட்சியினர் திரண்டு பேச்சிப்பாறை அணை பகுதியில் உள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது வழக்கம்.

இந்த ஆண்டு அலெக்சாண்டர் மிஞ்சினின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி விவசாயிகள் மற்றும் தி.மு.க.வினர் திரளாக சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். விவசாயிகள் அமைப்புகள் சார்பில் மாவட்ட உற்பத்தி குழு உறுப்பினருமான ஹென்றி தலைமையில் விவசாயிகள் மலர் மாலை அணிவித்தனர். தி.மு.க. சார்பில் குமரி மேற்கு செயலாளர் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நீர்வளம், இயற்கைவளம் காப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் புஷ்பலீலா ஆல்பன், விவசாய தொழிலாளரணி மாவட்ட அமைப்பாளர் அலாவுதின், பேரூர் செயலாளர் ஜோஸ்எட்வர்ட், ஆற்றூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பீனா அமிர்தராஜ், விவசாய அணி துணை அமைப்பாளர்கள் செல்லப்பன், ஜெஷ்டின் பால்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply