வேளாண் சட்டம் மோசமானது என்பதை மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும் தி.மு.க. முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்தநாள் மற்றும் தி.மு.க. உருவான தினம் ஆகிய முப்பெரும் விழா நேற்று நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே உள்ள மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தலைமை தாங்கி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்றார். விழாவில் பங்கேற்ற கட்சி முன்னோடிகள் 73 பேருக்கு பொற்கிழியை சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

முப்பெரும் விழாவில், தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று பேசும்போது கூறியதாவது:-

2000-ம் ஆண்டின் முதல் நாள் குமரி முனையில் 133 அடியில் வள்ளுவருக்கு சிலை வைத்த நாளில் முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி அடைந்த மகிழ்ச்சியை வாழ்நாளில் வேறு எப்போதாவது அடைந்திருப்பாரா என தெரியவில்லை. தன்னுடைய மாபெரும் கடமை முடிந்துவிட்டதாக கருணாநிதி பெருமைப்பட்டார்.

இப்படி ஒரு சிலை அமைக்க வேண்டும் என்று 25 ஆண்டுகளாக கனவு கண்டார். இப்படி ஒரு சிலை அமைக்க வேண்டும் என்று தவம் இருப்பதாகவும் சொன்னார். 1975-ம் ஆண்டே இப்படி ஒரு சிலை அமைக்க கருணாநிதி அறிவிப்பு செய்தாலும் 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி அன்றுதான், வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. அதனால்தான், “சிலையைத் திறக்கும் பொத்தானை அழுத்தியபோது, எனது விரல் மரத்துப் போய்விட்டது” என்று முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார். அந்த அளவுக்கு அவர் உணர்ச்சி மயமாக ஆனார்.

அத்தகைய குமரியில் தி.மு.க. முப்பெரும் விழா நடப்பது பொருத்தமானது. முத்தமிழறிஞர் கருணாநிதி தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் நடைபெறும்போதெல்லாம், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றித்தரப்பட்டுள்ளன. ஆனால் இன்றைய நிலைமை என்ன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

இது ஆட்சி அல்ல; தமிழகத்தின் வீழ்ச்சி. அதைத்தான் நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். முழுக்க முழுக்க ஊழல் அரசாங்கம் தான் நடந்து கொண்டு வருகிறது. விரைவில் கோட்டையை விட்டு வெளியேறுங்கள் என்பதுதான் அவர்களிடம் நாட்டு மக்கள் வைக்கின்ற ஒரே கோரிக்கையாக இருக்கிறது. மத்திய அரசாங்கம் கொண்டுவரும் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்த தமிழக அரசு எதுவும் செய்யாது என்பதால்தான் 3 சட்டங்களுக்கு எதிராக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற சொன்னோம்.

கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு. கிராம சபைகள் மக்களவைக்கு இணையானவை என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. எங்களுக்கு எது வேண்டும்? எங்களுக்கு எது வேண்டாம்? என்பதை தீர்மானிக்கும் உரிமை அந்தந்த கிராமங்களுக்கு உள்ளது. அந்தந்த அடிப்படையில்தான் தீர்மானம் நிறைவேற்ற சொன்னோம்.

ஆனால் கிராமசபை கூட்டத்தையே கலைத்துவிட்டார்கள். கிராமசபை கூட்டம் நடந்தால் கொரோனா பரவும் என்று அரசு சொல்கிறது. கிராமசபை கூட்டம் நடத்தலாம் என்று அறிவித்தபோது நாட்டில் கொரோனா இருப்பது தமிழக அரசுக்கு தெரியாதா?. கிராமசபை கூட்டதுக்கு தடை போட்டது, விவசாயிகளுக்கு செய்யும் துரோகம். கிராமங்களுக்கு செய்யும் துரோகம். காந்தியடிகளுக்கு செய்யும் துரோகம். ஜனநாயகத்துக்கு செய்யும் துரோகம். இந்தியாவின் எதிர்காலத்துக்கு செய்யும் துரோகம்.

இன்றைக்கு மத்தியில் இருக்கும் ஆட்சியாக இருந்தாலும், மாநிலத்தை ஆளும் ஆட்சியாக இருந்தாலும், அவை விவசாயிகளை மதிக்கவில்லை; விவசாயத்தையும் மதிக்கவில்லை. “ஏழைத் தாயின் மகன் நான்” என்கிறார் பிரதமர் மோடி. “நானும் விவசாயிதான்” என்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் இவர்கள் இருவரும் ஏழைகளையும் காப்பாற்றவில்லை. விவசாயிகளையும் காப்பாற்றவில்லை. இவர்கள் மக்களுக்காக ஆட்சி நடத்தவில்லை, கார்ப்பரேட்டுகளுக்காகத்தான் ஆட்சி நடத்துகிறார்கள். இந்த வேளாண் சட்டம் எவ்வளவு மோசமானது என்பதை அனைவரும் பொதுமக்களுக்கு பிரசாரம் செய்ய வேண்டும்.

மக்களை மறந்துவிட்டு, நாற்காலியையே நினைத்துக்கொண்டிருக்கும் கொள்ளைக் கூட்டத்தை விரட்டும் ஜனநாயக போராட்டம் தொடங்கிவிட்டது. அதில் குமரி மாவட்டமும் தன் பங்கை குறைவில்லாமல் செலுத்தட்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

விழாவில் நாஞ்சில் சம்பத் பேசும் போது கூறியதாவது:-

நவீன உலகத்திற்கு ஏற்ற தலைவர் மு.க.ஸ்டாலின். வெளிநாட்டு வாழ் தமிழர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் அனைவரிடமும் காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் பொதுக்குழு நடத்தினார். இது தமிழக அரசியலில் ஓர் வரலாறு. நீட் தேர்வும், புதிய கல்வி கொள்கையும் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களை பெரிதும் பாதிக்கும். புதிய கல்வி கொள்கை கொண்டுவந்தால், 2 ஆயிரம் அரசு பள்ளிகள் மூடப்படும். 3, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய தகுதி தேர்வு என்பது கொடுமையான விஷயம். தமிழகத்தில் நீட்தேர்வால் இதுவரை 13 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வு மனிதாபிமானத்தை மறக்க செய்கிறது.

தமிழகத்தில் இருமொழி கொள்கையில் தி.மு.க. தீவிரம் காட்டி வெற்றி பெற்றதைபோல், விரைவில் நீட் தேர்வு விவகாரத்திலும் வெற்றி பெறும். முதல் பட்டதாரிகளுக்கு சலுகைகள் வழங்கியது தி.மு.க. அரசு தான். இதன் மூலம் பல லட்ச முதல் பட்டதாரிகள் தோன்றி உள்ளனர். இது தமிழகத்துக்கு தி.மு.க. தந்த பரிசு.

இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.

விழாவில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பேசும் போது கூறியதாவது:-

2010-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தலைமையில் நாகர்கோவிலில் முப்பெரும் விழா நடைபெற்றது. இன்று(அதாவது நேற்று) தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முப்பெரும் விழா நடக்கிறது. கொரோனா காலகட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆற்றிய நல பணிகள் அனைத்தும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தின் வருங்கால முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பது மக்களின் முடிவு. தமிழக மக்களின் நலன் காக்கவும், உரிமைகளை காக்கவும் தி.மு.க. பாடுபடும் என்பது மக்கள் அறிந்ததே. தேர்தலில் குமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, அந்த வெற்றியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சமர்ப்பிப்போம்.

இவ்வாறு சுரேஷ்ராஜன் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் மகேஷ், கலை இலக்கிய பேரவை மாநில செயலாளர் தில்லை செல்வம், நிர்வாகிகள் சேக் தாவூத், வக்கீல் உதயகுமார், சிவராஜ், சதாசிவம், சுரேந்திரகுமார், சாகுல் அமீது, ராஜன், ஜவகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மருங்கூரில் நடந்த விழாவில் ஆஸ்டின் எம்.எல்.ஏ., வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மதியழகன், நிர்வாகிகள் முத்துசாமி, சாய்ராம், இளங்கோ, காந்திராஜ், செந்தில், அய்யப்பன், முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா கன்னியாகுமரியில் நடந்தது. ஒன்றிய செயலாளரும் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான தாமரைபாரதி தலைமை தாங்கினார். பின்னர் மூத்த தி.மு.க. தொண்டர்கள் 3 பேருக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் பார்த்தசாரதி, குமரி ஸ்டீபன், வைகுண்டபெருமாள், பாபு, காமராஜ் மாடசாமி, மகேஷ், நிசார், கெய்சர்கான் மற்றும் பாலஜனாதிபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தோவாளை ஒன்றிய தி.மு.க. சார்பில் இறச்சகுளத்தில் நடந்த விழாவுக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர்கள் சதீஸ், பிராங்ளின், தாணம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட பொருளாளர் கேட்சன் கலந்துகொண்டார். இதில் ரகுமான், சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply