நவராத்திரி விழாவுக்கு பாரம்பரிய முறைப்படி சாமி சிலைகள் ஊர்வலத்துக்கு அனுமதிக்க வேண்டும் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நவராத்திரி விழாவை முன்னிட்டு குமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் சுப்பிரமணிய சுவாமி, பத்மநாபபுரம் தேவார கட்டு சரஸ்வதி தேவி சிலைகள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்வது வழக்கம். இரு மாநில அரசுகளின் மரியாதையோடு பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்தில் இருந்து யானை மற்றும் பல்லக்கு மூலமாக இருமாநில காவல்துறை அணிவகுப்பு மற்றும் பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். வழிநெடுகிலும் பக்தர்கள் சாமி சிலைகளுக்கு பூஜைகள் செய்து வழிபடும் வழக்கம் காலம், காலமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த வருடம் சாமி சிலைகள் கொண்டு செல்வதற்கு கொரோனா தொற்று பரவலை காரணம் காட்டி மாற்று முறையில் (வாகனங்கள்) கொண்டு செல்ல முயற்சிப்பதாக தெரிகிறது. இது இந்துக்களின் கலாசாரத்தை சிதைப்பது போன்றதாகும். எனவே ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் இந்த பாரம்பரியமிக்க கலாசார நிகழ்வை சமூக இடைவெளிவிட்டு சிறப்பாக நடத்திட இரு மாநில அரசுகளும் அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply