25 சதவீத இடஒதுக்கீட்டின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர் சேர்க்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின்படி ஏழை மாணவர்களை சேர்ப்பதற்கான நடைமுறையை சரியாக கடைப்பிடிக்க வேண்டும் என்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கூறி உள்ளார்.

இதுதொடர்பாக குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்தியில் மன்மோகன்சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது, 2009-ம் ஆண்டு இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள், நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதற்கு ஆகும் செலவை பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணம், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு அரசு வழங்கி விடும். சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு மட்டும் இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சட்டம் அமலுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆன நிலையிலும், உண்மையான ஏழை, வாய்ப்பு மறுக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் பயனடையும் வகையில் இந்த சட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தாதது கண்டனத்துக்குரியது. இதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குளறுபடிகளை கல்வியாளர்கள் எடுத்து சொன்னாலும், அதை கண்டும், காணாமலும் அரசு இருக்கிறது. தற்போதைய அரசாணைப்படி இந்த வாய்ப்பை செல்வந்தர்களின் வீட்டு குழந்தைகள் தான் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநில அரசு இந்த 25 சதவீத ஒதுக்கீட்டுக்குள் உள் ஒதுக்கீடு கொண்டு வந்து, உண்மையான ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் சட்டத்தை அமல்படுத்தி வருகிறது.

குமரி மாவட்டத்தில் சில பள்ளிகளில், சில இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களிடம் கட்டணம் செலுத்தினால் மட்டுமே பள்ளியில் சேர்ப்போம் என்று தெரிவிக்கின்றனர். குறிப்பாக கருங்கல், புதுக்கடை, காப்பிக்காடு, கொல்லங்கோடு, நித்திரவிளை, வாவறை, ஊரம்பு, மார்த்தாண்டம், களியக்காவிளை, கீழ்குளம், மேல்புறம், திருவட்டார், குலசேகரம், தக்கலை ஆகிய பகுதிகளில் ஒரு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கட்ட வேண்டும் என்று கூறுகிறார்கள். இதற்கு முன்பு இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களிடமும், கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.

எனவே இந்த திட்டத்தில் கடந்த ஆண்டுகளில் மற்றும் இந்த ஆண்டு சேர்ந்த அனைத்து மாணவர்களின் பெற்றோரை கல்வி அதிகாரிகள் அழைத்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் இந்த திட்டத்தில் சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் பாட புத்தகங்கள் மற்றும் சீருடை ஆகியவற்றுக்கு மட்டுமே கட்டணம் செலுத்த மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு எல்லா நிலைகளிலும் ஏழை மாணவர்கள் புறக்கணிக்கப்படும் வகையிலேயே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நடைமுறை தொடருமானால் அரசு பணம் விரையமாவதுடன், சட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் போய் விடும். எனவே உண்மையான ஏழை மாணவர்களுக்கு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் பலன் சென்று சேரும் வகையில் நடைமுறைகளை சரியாக கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply