அரிவாளால் வெட்டி வழிப்பறி: நாகர்கோவிலில் ரவுடி உள்பட 3 வாலிபர்கள் கைது…!

நாகர்கோவில் அருகே பறக்கை புல்லுவிளையை சேர்ந்தவர் ரோஸ் பாண்டியன். கோட்டார் செட்டித் தெருவில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் கடையில் இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் அவரை அரிவாளால் வெட்டி விட்டு அவரிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றார். அந்த மர்மநபருக்கு உதவியாக 2 பேர் இருந்துள்ளனர். அதோடு ராமன்புதூரை சேர்ந்த மேரிகுளோரி என்ற பெண்ணிடம் அரிவாளை காட்டி மிரட்டி செல்போனை வழிப்பறி செய்துள்ளனர்.

மேலும் செல்லும் வழியில் கதிரேசன் என்பவரையும் அரிவாளால் வெட்டி விட்டு செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். நாகர்கோவிலில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து நடந்த இந்த வழிப்பறி சம்பவம் மக்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தியது. எனவே சம்பந்தப்பட்ட மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வலுத்தது.

இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட 3 பேர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் சம்பவம் நடைபெற்ற இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் முதல் சம்பவம் நடந்த பலசரக்கு கடை முன்பு இருந்த கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்கள் உருவம் பதிவாகி இருந்தது. அந்த உருவத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்தது சக்திகார்டனை சேர்ந்த சுகுமாரன் (வயது 26), அழகப்பபுரத்தை சேர்ந்த கார்த்திக் (27) மற்றும் ராமன்புதூரை சேர்ந்த நடராஜன் (20) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து 3 பேரையும் போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று 3 பேரும் போலீசாரிடம் சிக்கினர். அதன்பிறகு 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “இச்சம்பவம் தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் சுகுமாரன் தான் அரிவாளால் வெட்டி இருக்கிறார். மோட்டார் சைக்கிளை நடராஜன் ஓட்டியிருக்கிறார். இதைத் தொடர்ந்து 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 3 பேரும் நண்பர்கள் ஆவர்.

இதில் சுகுமாரன் மீது ஏற்கனவே கொலை முயற்சி உள்பட பல வழக்குகள் உள்ளன. ரவுடி பட்டியலிலும் அவர் பெயர் உள்ளது. மேலும் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டு உள்ளார். இந்த 3 பேரும் வழிப்பறியில் ஈடுபட்டதோடு பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கும் சென்று அரிவாளை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தப்பி சென்று இருக்கிறார்கள்“ என்றார்.

இதனையடுத்து கைதான 3 பேரிடம் இருந்து 2 அரிவாள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்கள் வழிப்பறி செய்த 2 செல்போன்களும் கைப்பற்றப்பட்டன.

Leave a Reply