பறக்கை அருகே டெம்போ மோதி டிரான்ஸ்பார்மர் சேதம்…!

நாகர்கோவிலில் இருந்து மணக்குடி நோக்கி நேற்று நள்ளிரவு ஒரு டெம்போ சென்றது. அந்த டெம்போ பறக்கை அருகே உள்ள குளத்துவிளை பகுதியில் சென்றபோது திடீரென டெம்போ சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.இதில் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் ஆகியவை சேதமடைந்தன. இதையடுத்து அந்த டெம்போ டிரைவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

டெம்போ மோதியதால் குளத்துவிளை பகுதி முழுவதும் பல மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய செயற்பொறியாளர் ராஜசேகர், உதவி செயற்பொறியாளர் அருண், இளநிலை பொறியாளர் ரமேஷ் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேதமடைந்த டிரான்ஸ்பார்மரை அகற்றி விட்டு சீரமைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

விபத்து காரணமாக ரூ.5 லட்சம் மின்சாதனம் சேதமடைந்ததாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு தற்காலிக டிரான்ஸ்பார்மரை அமைத்து மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற டெம்போ டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Leave a Reply