குமரியில் நாளை முதல் 5½ லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வினியோகம் கலெக்டர் தகவல்…!

குமரி மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் 5½ லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வளரும் குழந்தைகளுக்கு குடற்புழுக்கள் இருந்தால் உடல் வளர்ச்சி குறைபாடு, ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இந்த குறைபாடுகளை களைவதற்கு வருடத்திற்கு இருமுறை குடற்புழு நீக்க மாத்திரை கொடுப்பதுடன் கைகழுவுதல், கழிப்பறைகளை பயன்படுத்துதல் மற்றும் தன்சுத்தம் பேணுதல் ஆகியவற்றை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்குஏற்படும் ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்கலாம்.

இந்த ஆண்டு கொரோனா தொற்றினைக் கருத்தில்கொண்டு தேசிய குடற்புழு நீக்க தினம் இரண்டு சுற்றுகளாக நடைபெற உள்ளது. முதல் சுற்று நாளை(திங்கட்கிழமை) முதல் 19-ந் தேதி வரையும் (செவ்வாய், புதன் நீங்கலாக), இரண்டாம் சுற்று 21-ந் தேதி முதல் 26-ந் தேதி வரையும் (செவ்வாய், புதன் நீங்கலாக) குமரி மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயது வரையில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்கம் செய்யும் பொருட்டு அல்பண்டாசோல் மாத்திரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை முழுமையாக நல்லமுறையில் செயல்படுத்தும் பொருட்டு சுகாதாரத்துறை, கல்வித்துறை மற்றும் ஊட்டச்சத்துதுறை இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படாததால் அனைத்து 1 வயது முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு குறிப்பிட்ட அங்கன்வாடி மையங்கள், அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் வைத்து அல்பண்டாசோல் மாத்திரைகள் காலை உணவிற்கு பிறகு அல்லது மதிய உணவிற்கு பிறகு வழங்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாத்திரையை கடித்து சுவைத்து சாப்பிட வேண்டும்.

குமரி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க தினத்தில் 5 லட்சத்து 40 ஆயிரத்து 940 குழந்தைகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தேவையான மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மாத்திரைகளை உட்கொள்வதால் எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை. முதல் மற்றும் இரண்டாம் சுற்றுகளில் உடல்நலக்குறைவு மற்றும் வேறு காரணங்களால் மாத்திரை உட்கொள்ளாத குழந்தைகளுக்கு வருகிற 28-ந் தேதி அன்று அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வைத்து அல்பண்டாசோல் மாத்திரை வழங்கப்படும். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மாத்திரை உட்கொண்டதை உறுதிப்படுத்தி அவர்களது நல்வாழ்விற்கு ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply