குமரிக்கு வருகை தரும் முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் அ.தி.மு.க.வினருக்கு, தளவாய்சுந்தரம் வேண்டுகோள்…!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டம்தோறும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். மேலும், ஆய்வு கூட்டத்தின் போது விவசாய அமைப்பினர், தொழில் துறையினர், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதே சமயத்தில் பல்வேறு திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.

இந்தநிலையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய வருகிற 21-ந் தேதி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குமரி மாவட்டம் வருகிறார். இதனையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து நேற்று நாகர்கோவிலில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அவை தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ. அசோகன் (கிழக்கு), ஜாண் தங்கம் (மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் சிறப்புரையாற்றினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ் தீர்மானத்தை வசித்தார்.

அதில், வருகிற 21-ந் தேதி குமரிக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க மாவட்ட நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணி மற்றும் முன்னேற்பாடு, வரவேற்பு குறித்து தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் விளக்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா குமரி மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது, நமது மாவட்டத்திற்கு மிகப்பெரிய பெருமையாகும். தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வரும் முதல்-அமைச்சர், வருகிற 21-ந் தேதி குமரி மாவட்டத்துக்கு வருகிறார். நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கும் முதல்-அமைச்சர், பல்வேறு திட்ட பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது முதல்-அமைச்சரை சந்திக்க வரும் அ.தி.மு.க. நிர்வாகிகள் தங்களது கருத்துகளை அவரிடம் தெரிவிக்கலாம். அவ்வாறு கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் நிர்வாகிகள் அனைவரும், கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருப்பது அவசியம்.

முன்னதாக நாகர்கோவில் ஒழுகினசேரியில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை தொண்டர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து நீண்ட வரிசையில் நின்று முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இதற்கு கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு தளவாய்சுந்தரம் பேசினார்.

கூட்டத்தில் மாநில கலை இலக்கிய பிரிவு இணை செயலாளர் சதாசிவம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் சந்துரு, கிழக்கு மாவட்ட துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜன், நிர்வாகிகள் ஜெயசீலன், சுகுமாறன், யூஜின், செல்வகுமார், அழகேசன், சுதர்சன், சுந்தரம், பொன்.சுந்தர்நாத், கண்ணன், மகளிரணி நிர்வாகிகள், மாணவரணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply