குலசேகரம் அருகே கோவிலில் உண்டியல் கொள்ளை, கண்காணிப்பு கேமிராவில் பதிந்த கொள்ளையர்களின் உருவம் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் ஆய்வு…!

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் சந்தை அருகே மணலிவிளையில் ஈஸ்வரகாலபூதத்தான், பத்திரகாளியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூஜை முடித்து நடை அடைத்து சென்றபின் நேற்று காலையில் கோவிலில் வழிபட வந்த பக்தர்கள் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதை தொடர்ந்து குலசேகரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரம் காவல் உதவி ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான காவல்துறையினர் கொள்ளை குறித்து ஆய்வு மேற்கொண்டதில் கோவிலில் 3 உண்டியல்கள் மற்றும் இரும்பு பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பணம் கொள்ளையடித்து விட்டு சில்லறை காசுகளை விட்டு சென்றுள்ளது தெரியவந்தது.

பின்னர் கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு கொள்ளையர்கள் இருவர் கோவிலில் ஏறிகுதித்து உண்டியலை உடைத்து பணம் திருடுவது தெரியவந்தது. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கபட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மோப்பநாய் ஏஞ்சல் கோவிலிலிருந்து பட்டணங்கால்வாய் பாலம் வழியாக குலசேகரம் மணலிவிளை டவர் சந்திப்பு வரைசென்று திரும்பியது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து குலசேகரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் 30ம் தேதி இக்கோவிலின் சுற்றுசுவர் வேலியை மர்மநபர்கள் உடைத்தது குறிப்பிடத்தக்கது. மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதியான இக்கோவிலில் கொள்ளையடிக்கபட்டது அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Leave a Reply