மார்த்தாண்டம் பஸ்நிலையத்தில் செயல்படும் தற்காலிக சந்தையை மீண்டும் காய்கறி மார்க்கெட்டுக்கு மாற்ற வேண்டும் நகராட்சியில் வர்த்தகர் சங்கத்தினர் மனு

மார்த்தாண்டம் நகர வர்த்தகர் சங்கம் சார்பில் தலைவர் தினகர், துணைத்தலைவர் ராஜகோபால், செல்வராஜ், செயலாளர் ராஜ்பினோ, பொருளாளர் ஜெயசிங், மாவட்ட இணை செயலாளர் ஆனந்த், உதவி செயலாளர்கள் நீலகண்டன், வில்பிரட் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் குழித்துறை நகராட்சி மேலாளர் ஜெயன் பெல்லார்மினிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா ஊரடங்கை தொடர்ந்து தொற்று பரவாமல் தடுக்கவும், பொதுமக்கள் கூட்டம் கூடாமல் சமூக இடைவெளியில் நின்று காய்கறிகள் வாங்குவதற்கு வசதியாக மார்த்தாண்டம் புதிய பஸ்நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டது. அங்கு சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மொத்த வியாபாரிகள் காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்தனர்.

தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து பொது போக்குவரத்து தொடங்கியது. அதன்படி பஸ் போக்குவரத்து தொடங்கியதால் பஸ்நிலையத்தில் பயணிகள் வந்து செல்வதால் சிறு வியாபாரிகளுக்கு இடையூறும், கூட்ட நெருக்கடியும் ஏற்படுகிறது. இதனால், சிறு வியாபாரிகள் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் வடசேரி பஸ்நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தை மீண்டும் கனகமூலம் சந்தைக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதேபோல், மார்த்தாண்டம் புதிய பஸ்நிலையத்தில் செயல்படும் தற்காலிக சந்தையை, காய்கறி மார்க்கெட்டுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply