தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் மணல் திட்டுகளை அகற்றாவிட்டால் போராட்டம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிவிப்பு

ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின் முகப்பு பகுதியில் ஏற்படும் மணல் குவியலால் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தது. எனவே இதை தடுப்பதற்காக மீனவர்களின் கோரிக்கைபடி தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் கொடுத்த அழுத்தத்தின் பயனாக ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் மணல் அள்ளும் எந்திரம் கடந்த மாதம் 10-ந் தேதி கொண்டு வரப்பட்டு தொடர்ந்து மணல் அள்ளும் பணிகள் மேற்கொள்ளப்படும் என மீன்வளத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

ஆனால் நாகர்கோவிலில் உள்ள மீன்பிடி துறைமுக திட்ட கோட்ட அதிகாரிகளால் அதற்கான பணிகள் தொடங்கப் படவில்லை. இதனால் நான் மீன்பிடி துறைமுகதிட்ட கோட்ட செயற்பொறியாளரை நேரில் சந்தித்து பேசியபோது 9-ந் தேதிக்குள் தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள மணல் திட்டுகளை அகற்றி ஆழப்படுத்தும் பணிகள் தொடங்கப்படும் என்று கூறினார்.

ஆனால் தற்போது வரை பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே 5 நாட்களுக்குள் மணல் திட்டுகளை அகற்றி தூர்வாரும் பணிகளை தொடங்க வேண்டும். இல்லை எனில் நாகர்கோவிலில் உள்ள மீன்பிடி துறைமுக திட்ட கோட்ட செயற் பொறியாளர் அலுவலகத்தில் என் தலைமையில் மீனவ மக்களை ஒன்று திரட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply