நாகர்கோவில் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள பாடப்பிரிவுகளுக்கு இன்று முதல் மாணவர் சேர்க்கை முதல்வர் அறிவிப்பு

நாகர்கோவில் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மாணவர்கள் இன்று (புதன்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவில் கோணம் அரசு கலை -அறிவியல் கல்லூரியில் 2020- 2021-ம் கல்வியாண்டில் இளநிலை பட்ட வகுப்புகளில் முதல் கட்ட மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி முதல் 4-ந் தேதி முடிய ஆன்லைனில் நடந்தது. இன்னும் சில பாடப்பிரிவுகளில் இடங்கள் காலியாக உள்ளது. அவற்றுக்கு இன்று (புதன்கிழமை) முதல் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

பொருளியல், வரலாறு, புள்ளியியல் பாடப்பிரிவுகளில் பின்தங்கிய வகுப்பினருக்கான (பி.சி.) இடங்களும், பொருளியல், வரலாறு, கணிதம், புள்ளியியல், வணிக நிர்வாகவியல், இயற்பியல், வணிகவியல் பாடப்பிரிவுகளில் மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கான (எம்.பி.சி.) இடங்களும், பொருளியல் ஆங்கிலம், வரலாறு, கணிதம், புள்ளியியல், வணிகவியல், வணிக நிர்வாகவியல், இயற்பியல், கணினி அறிவியல் பாடப்பிரிவுகளில் தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.) மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடி (எஸ்.டி.) பிரிவினருக்கான இடங்களும் காலியாக உள்ளன.

இந்த இடங்களுக்கு இதுவரை விண்ணப்பிக்காமல், தற்போது விண்ணபிக்க விரும்புவோர் கல்லூரி அலுவலகத்தில் இன்று முதல் வருகிற 11-ந் தேதி வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ரூ.50 செலுத்தி விண்ணப்பங்களை பெற்று கொண்டு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தில் சரியான செல்போன் எண், மின்னஞ்சல் முகவரியை குறிப்பிட வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரியில் சேர்க்கைக் கடிதம் அனுப்பப்படும். அதன் அடிப்படையில் கல்லூரிக்குச் செலுத்த வேண்டிய தொகையினை ஆன்லைனில் செலுத்தலாம். பின்னர் அசல் மாற்றுச்சான்றிதழ், 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், ஆதார் மற்றும் மாணவர் பெயரில் உள்ள வங்கிக்கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல் ஆகியவற்றைக் கல்லூரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply