குமரி – வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்கள் மூலம் ஒரே நாளில் ரூ.25½ லட்சம் வருவாய்

தமிழக அரசு ஊரடங்கில் தளர்வுகள் அளித்ததை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் மாவட்ட பகுதிகளுக்குள்ளும், நேற்று முன்தினம் முதல் மாவட்டங்களுக்கு இடையேயும் பஸ் போக்குவரத்து தொடங்கியது. குமரி மாவட்டத்தில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், சிவகாசி, திருப்பூர், ராமேசுவரம், மதுரை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டலம் சார்பில் 79 பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் 276 பஸ்கள் இயக்கப்பட்டன.

இதேபோல் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் குமரி மாவட்டத்தில் இருந்து சென்னை, வேளாங்கண்ணி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 20 பஸ்கள் இயக்கப்பட்டன. வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்களில் ஏராளமான பயணிகள் மகிழ்ச்சியோடு பயணம் மேற்கொண்டனர். இதனால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஓரளவு வருவாயும் கிடைத்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டலம் சார்பில் குமரி மாவட்டத்திலும், வெளி மாவட்டங்களுக்கும் இயக்கப்பட்ட 355 பஸ்கள் மூலம் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.25 லட்சத்து 60 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளது. கொரோனா பரவலுக்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிடுகையில் சுமார் ரூ.10 லட்சம் வருவாய் குறைவுதான் என்கிறார்கள் அதிகாரிகள். ஆனாலும் மிகவும் மோசமான வருவாயாக இது இல்லை என்றும், போகப்போக இந்த வருவாய் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்று குமரி மாவட்டப் பகுதிகளுக்குள் கூடுதலாக 20 பஸ்கள் இயக்கப்பட்டன. அதாவது நேற்று முன்தினம் 355 பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று இது 375 ஆக உயர்த்தப்பட்டது.

அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் வருவாய் குறித்து கேட்டபோது சென்னை மற்றும் வெளிமாவட்ட பகுதிகளுக்கு சென்றுள்ள பஸ்கள் திரும்ப வந்த பிறகுதான் எவ்வளவு வருவாய் என்பது தெரியும் என்று கூறினர். பயணிகள் தேவைக்கு ஏற்ப பஸ்களை அதிகமாக இயக்குவது பற்றியும், குறைப்பது பற்றியும் முடிவு செய்யப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply