நாகர்கோவிலில் நள்ளிரவில் வாலிபரை அடித்துக் கொன்றவர் கைது…!

நாகர்கோவிலில் கீழ ஆசாரிபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ்பிரேம் என்ற கஸ்பர் (வயது 35). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு பிணமாக கிடந்தார். உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் ஆசாரிபள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் அலெக்ஸ் பிரேமை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக இந்த கொலை நடந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில் முன்விரோதத்தில் அதே பகுதியைச் சேர்ந்த புருஷோத் (28) என்பவர் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் புருஷோத்தை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:-

கொலையான அலெக்ஸ் பிரேமும், புருஷோத்தும் நண்பர்கள். இவர்கள் தங்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். இதேபோல் கடந்த மே மாதம் 26-ந் தேதி மது அருந்தி உள்ளனர். அப்போது போதை அதிகமாகி அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பிரேமும், புருஷோத்தும் இரு கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர். இதுதொடர்பாக இருதரப்பினர் மீதும் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இதனால் அலெக்ஸ் பிரேமுக்கும், புருஷோத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அலெக்ஸ் பிரேம் புருஷோத் வீட்டின் அருகே நடந்து சென்றதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த புருஷோத், அலெக்ஸ் பிரேமிடம் ஏற்கனவே உள்ள முன்விரோதத்தால் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இருவரும் மாறி, மாறி தாக்கியுள்ளனர். இதில் கீழே விழுந்த அலெக்ஸ் பிரேமை, புருஷோத் கையால் மார்பு, தலை உள்ளிட்ட பல இடங்களில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து புருஷோத்தை போலீசார் கைது செய்தனர். அப்போது அவருடைய தலையில் ஏற்கனவே காயம் ஏற்பட்டு இருந்ததால் அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரை இன்று (செவ்வாய்க்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply