குளச்சல் துறைமுக விரிவாக்கம் குறித்து முதல் – அமைச்சரிடம் எடுத்துரைக்கப்படும் : தளவாய்சுந்தரம் தகவல்

குளச்சல் மீன்பிடி துறைமுகம் விரிவாக்கம் குறித்த ஆலோசனை கூட்டம், குளச்சல் பங்குத்தந்தை அலுவலகத்தில் நடந்தது. தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமை தாங்கினார். குளச்சல் வட்டார குருகுல முதல்வர் சேல்ஸ், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குளச்சல் பங்குத்தந்தை மரியசெல்வம் வரவேற்று பேசினார். அப்போது அவர் கூறியாவது:-

ஈரான் நாட்டில் இருந்து, குமரி மாவட்ட மீனவர்களை தங்களது சொந்த ஊர்களுக்கு அழைத்து வந்த தமிழக முதல்-அமைச்சருக்கும், மீனவ மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து, தனது சொந்த செலவில் நிதியுதவி, அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கிய தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரத்திற்கும், குமரி மாவட்ட மீனவ மக்களின் சார்பில், நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.

கூட்டத்தில் விசைப்படகு சங்க தலைவர் பிரான்சிஸ், துணைத்தலைவர் ஆன்டிரியாஸ், துணைச்செயலாளர் டினோ உள்ளிட்ட மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது அவர்கள் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில், தற்போது குறைந்த அளவு மீன்பிடி படகுகளே வந்து செல்ல முடிகிறது. இங்கு கொட்டில்பாடு, புதூர், குளச்சல், சைமன்காலனி, கோடிமுனை, வாணியகுடி, குறும்பனை ஆகிய 7 மீனவ கிராமங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், இந்த துறைமுகத்தில், அதிகமான விசைப்படகுகள் நின்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியாமலும், மீன் விற்பனை செய்யமுடியாமலும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே துறைமுகத்தை மேலும் விரிவுப்படுத்தி அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், என்றனர்.

பின்னர், தளவாய் சுந்தரம் பேசும் போது கூறியதாவது:-

முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குமரி மாவட்டத்திற்கு வருகைதந்து, மீனவ சங்க பிரதிநிதிகள், பங்குத்தந்தையர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். இந்த கூட்டத்தின் போது, குளச்சல் மீன்பிடி துறைமுகம் விரிவாக்கம் குறித்தும், இந்த பகுதி மீனவ மக்களின் கோரிக்கைகள் குறித்தும் எடுத்துரைக்கப்படும். மேலும், குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு தூண்டில் வளைவுகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அரசாணையும் தற்போது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தேங்காப்பட்டணம் உள்பட பல்வேறு மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. முதல் அமைச்சரின் தலைமையிலான தமிழக அரசு, எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு தளவாய்சுந்தரம் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட மீன்வள கூட்டுறவு இணைய தலைவர் திமிர்த்தியூஸ், விசைப்படகுமீன்ப்பிடிப்பவர் நலசங்க செயலாளர் பிராங்கிளின், பொருளாளர் ஜெயசீலன், குளச்சல் ஆன்றோஸ் உள்பட பல்வேறு மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply