குமரியில் 3 பேர் கொலை: வாலிபரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவு…!

நாகர்கோவில் அருகே வெள்ளமடம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் சுப்பையா (வயது 57). இவருடைய மனைவி வசந்தி மற்றும் வளர்ப்பு மகள் அபிஸ்ரீ. இவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த மெரின் ராஜேந்திரன் என்பவரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு 2015-ம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில், மேலும் இந்த கொலை வழக்கில் நாகர்கோவிலை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சுரேசை தேடி வந்தனர். இதற்கிடையே சுரேஷ், சவுதி அரேபியாவிற்கு தப்பி சென்றார். இந்தநிலையில், கடந்த 1-ந் தேதியன்று சவுதி அரேபியாவில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு சுரேஷ் வந்தார்.

தகவல் அறிந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், சுரேசை கைது செய்து நாகர்கோவிலில் உள்ள 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி குழித்துறை சிறையில் அடைத்தனர். பின்னர் சுரேசை 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்த நீதிபதி கிறிஸ்டியன், 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

Leave a Reply