குமரி மாவட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் ஞாயிறு திருப்பலி முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பக்தர்கள் பிரார்த்தனை…!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலையொட்டி மூடப்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் 23 ஞாயிற்றுக்கிழமைகளில் ஆராதனைகள் நடக்காத நிலையில் நேற்று 24 வது ஞாயிறில் நடந்த ஆராதனையில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் மக்கள் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 575 சிஎஸ்ஐ ஆலயங்கள், 400க்கும் மேற்பட்ட கத்தோலிக்க தேவாலயங்கள், சுமார் 300 சால்வேஷன் ஆர்மி சர்ச்சுகள் மற்றும் பெந்தேகோஸ்தே, மலங்கரை கத்தோலிக்க திருச்சபை என சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன. இந்த தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஆராதனைகள் நடக்கும். திடீர் என மக்களை கொரோனா வைரஸ் அச்சுறுத்த துவங்கியது. இதனால் மத்திய, மாநில அரசுகள் மக்களை காக்கும் விதமாக மார்ச் 24 ம் தேதி முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.

இதனால் வழிபாட்டு ஸ்தலங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் இறை வழிபாடு தடை‌பட்டது. ஆலய வாசல்கள் என்று தான் திறக்குமோ என எண்ணியபடி வீட்டுக்குள் முடங்கினர். இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸின் தொல்லையிலிருந்து விடுபட வீட்டில் இருந்தவாறே இறைவனிடம் வேண்டினர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முதலில் இருந்ததை விட பல ஆயிரம் மடங்கு பெருகிய பின்‌ தளர்வுகளை சில விதிமுறைகளுடன் அரசு அறிவித்தது. இந்நிலையில் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் செப் 1 ம் தேதி முதல் செயல்படலாம் என அரசு அறிவித்தது.

இந்நிலையில் 6 ம் தேதி ஆர்சி, சிஎஸ்ஐ, பெந்தேகோஸ்தே, சால்வேஷன் ஆர்மி, மலங்கரை கத்தோலிக்க தேவாலயங்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலயங்கள் மணியோசையுடன் திறக்க மக்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் ஆராதனையில் பங்கேற்றனர். அதேவேளையில் சிறுவர், சிறுமியர்கள், முதியவர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். அரசு மற்றும் சபைகளில் விதி முறைகளை கடைபிடித்து மக்கள் பங்கேற்றது கொரோனா வைரஸூக்கு சவுக்கடி ஆக இருக்கலாம் என பரவலாக பேசப்பட்டது.

Leave a Reply