குமரியில் கொரோனா நோயாளிகள் 799 பேர் சிகிச்சையில் உள்ளனர் கலெக்டர் தகவல்…!

குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பள்ளம் பகுதியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவருக்கு மூச்சு விடுவதில் பிரச்சினை இருந்துள்ளது. ஆனால் இதுகுறித்து அவர் கவலைப்படாமல் இருந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே இருதய நோயும், உயர் ரத்த அழுத்தமும் இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் அரசு மருத்துவனையில் பரிசோதனைக்காக வந்தபோது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அபாய கட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி அடுத்த நாளே மரணத்தை தழுவினார்.

பொதுமக்கள் இந்த நோய்த் தொற்று அறிகுறிகள் குறித்து அஜாக்கிரதையாக இருக்காமல் உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இழப்புகளைத் தவிர்க்க வேண்டும்.

முக கவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 92 பேருக்கு அபராதமாக ரூ.9,200 வசூலிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் இதுவரை 1,31,013 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோவிட் கவனிப்பு மையங்கள், தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமைகளில் 799 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 9,221 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply