இரணியல் அருகே சொகுசு காரில் கடத்திய 51 கிலோ சந்தன கட்டை பறிமுதல்…!

குமரி மாவட்டத்தில் அடிக்கடி சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டு வந்தது. இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி உத்தரவின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் இரணியல் அருகே திங்கள்நகர் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள்.

அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை தடுத்து சோதனை போட்ட போது, அதில் சந்தன கட்டைகள் கடத்தியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 51 கிலோ சந்தன கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வேளிமலை வனசரக அதிகாரி மணிமாறன் தலைமையில் வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள். அப்போது, ‘மார்த்தாண்டம் அருகே மங்காடு பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் தோட்டத்தில் சந்தன மரம் வளர்ந்து நின்றது. அந்த மரத்தை கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்த ஷிபு என்பவருக்கு ரூ.20 ஆயிரத்துக்கு விற்றதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஷிபு அந்த மரத்தை, வனத்துறையின் அனுமதியின்றி வெட்டி கடத்தியது தெரிய வந்தது.

வனத்துறையின் அனுமதியின்றி சந்தன மரத்தை வெட்டியதற்காக ஷிபு மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். அதைத்தொடர்ந்து அந்த தொகையை அவர் செலுத்தினார்.

Leave a Reply