மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஆவணி அஸ்வதித் திருவிழா ரத்து…!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் நடக்கும் ஆவணி அஸ்வதித் திருவிழா கொரோனா தொற்று நோய் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா தொற்று நோய் காரணமாக கடந்த பல மாதங்களாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி முதல் இந்தியாவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் அனைத்து வழிபாட்டு ஸ்தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு மூடப்பட்டது. ஆனால் தினசரி பூஜைகள் மட்டும் முறையாக நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் வழிபாட்டு ஸ்தலங்கள் அனைத்தும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து விடப்பட்டது. அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறையை பின்பற்றி கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அதன்படி கோயில்களில் கூட்டமாக பக்தர்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு கோயிலில் நடக்கும் விழாக்கள் அனைத்தும் தடை செய்ய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் இன்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கவிருந்த ஆவணி அஸ்வதி திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் விழா நாட்களில் நடக்கும் சுமங்கலிபூஜை, பொங்கல் வழிபாடு மற்றும் திருவிளக்குபூஜை ஆகிய அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும் கோயில் மேலாளர் ஆறுமுகதரன் தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று நாட்களும் கோயிலில் சிறப்புபூஜை மற்றும் வழிபாடுகள் நடக்கவுள்ளது என அவர் தெரிவித்தார்.

Leave a Reply