குமரி சிஎஸ்ஐ திருச்சபைகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து பேராயர் செல்லையா அறிவித்திருப்பதாவது…!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதலின் அடிப்படையில் தென்னிந்திய திருச்சபைகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து குமரி சிஎஸ்ஐ பேராயர் செல்லையா அறிவித்திருப்பதாவது,

இதுகுறித்து ஆலயங்கள் தோறும் அனுப்பியிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

கொரோனா வைரஸ் தடுக்கும் நடைமுறையில் அரசோடு இதுவரையிலும் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தோம். சுமார் ஐந்து மாதங்கள் ஆலய ஆராதனைகள் முறைப்படி நடத்த இயலவில்லை. செப்டம்பர் 1 ம் தேதி முதல் ஆலயத்தில் ஆராதனை நடத்த அரசு வழிகாட்டு நடைமுறைகளை தந்துள்ளது. இதை குமரி பேராய மக்களான நாம் மிக பொறுப்போடும் ஜெபத்தோடும் ஆலயங்களில் கடைபிடிக்க வேண்டும்.

பொதுவாக கடைபிடிக்க வேண்டிய தடுப்பு முறைகள்: நோய்தொற்று பரவிய நாள் முதல் ஆலயங்கள் திறக்க அனுமதி இல்லை. 10 வயதிற்கு கீழானவர்கள், 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள், காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி உள்ளவர்கள் தொழுகையில் பங்கு பெறக்கூடாது. பாடகர் குழுவினர் கூட்டமாக நின்று பாடுவதை தவிர்த்து ஒரு இசைக்கருவி மட்டும் பயன்படுத்த வேண்டும்.

பாடகர் குழுவினர் தனி இடத்தில் நிற்காமல் இறைமக்கள் அமரும் இடத்தின் முன் பகுதியில் நின்று பாடலாம். கரங்களால் தொடும் திருமுழுக்கு, கை குலுக்குதல் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். பிறந்தநாள் மற்றும் திருமண நாள் போன்ற சிறப்பு ஜெபங்கள் அவரவர் உட்காரும் இடத்தில் எழுந்து நிற்க போதகர் ஜெபிக்க வேண்டும். பாடல் புத்தகங்கள், திருமுறை, பாடல்தாள்கள், பரிசுகள், நோட்டீஸ்கள் பகிர்தல் கூடாது. காணிக்கைகள் கைகளில் சேகரிப்பதை தவிர்த்து மேசைகள் அல்லது காணிகள் ஓரிடத்தில் வைத்து சேகரிக்க வேண்டும்.

திருவிருந்து, போது கூடுகைகள், அன்பின் விருந்து போன்றவை அரசு முழு தளர்வு தரும் வரையிலும் நடத்தக்கூடாது. கிளைச் சங்க கூடுகைகள் பக்தி முயற்சி, ஆண்கள் பெண்கள் சங்கம், பாடகர் குழு பயிற்சி, விழிப்பு ஜெபக் கூடுகை, இரவு வீட்டுக்கூட்டம், ஆகியவை மறு அறிவிப்பு வரும் வரையிலும் நடத்தக்கூடாது. கொரோனா குறித்த விழிப்புணர்வு தொழுகையில் பங்கு பெறுவோர்க்குரிய விதிமுறைகளும் வெளியே வைக்கப்பட வேண்டும்.

ஆலயம் மற்றும் வளாகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நோய் தடுப்பு முறைகள்: ஆலய வளாகத்தில் எச்சில் துப்பக்கூடாது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும். நெருக்கடியாக வாகனங்கள் நிறுத்துவது தவிர்க்கப்படவேண்டும். மேலும் ஆலய வளாகத்தில் 5 பேருக்கு அதிகமாக கூடிப்பேசுவதை தவிர்க்க வேண்டும். தொழுகைக்கு முன்னும் பின்னும் ஆலய வளாகமும் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும்.

தொழுகை நேரம் அதிகபட்சம் ஒரு மணி நேரம் ஆகும். மறு அறிவிப்பு வரும் வரையிலும் தொழுகை மட்டும் நடத்தவும். தேவைக்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்ட தொழுகைகள் நடத்தலாம். ஒவ்வொரு தொழுகைக்கும் ஒரு மணி நேரம் இடைவெளி வேண்டும். ஆலயத்திற்குள் வருவதும் வெளியேறுவதும் வெவ்வேறு வாசல்கள் ஒழுங்கு செய்யப்பட வேண்டும். காலணிகள் ஆலயத்திற்கு வெளியே நீண்ட இடைவெளி விட்டு வைக்கப்பட வேண்டும்.

போதகர் உட்பட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கைகழுவும் வசதி அல்லது கிருமிநாசினி ஆலயத்தின் முன் வாசலில் வைக்கப்பட வேண்டும். தெர்மல் ஸ்கேனர் வைத்து பரிசோதித்து காய்ச்சல் இல்லை எனக்கூறி உறுதி செய்யப்பட்ட பின்னரே ஆலயத்தில் அனுமதிக்கப்பட வேண்டும். ஆலய வளாகத்தில் உபயோகப்படுத்தப்பட்ட முக கவசம் அல்லது கையுறைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும். முக கவசம் இல்லாமல் வருபவர்களுக்கு முகக்கவசம் வழங்க வேண்டும்.

ஆலயத்திற்குள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்: ஆலயத்திற்குள் உட்காருவதற்கு 6 அடி இடைவெளியில் இடம்விட்டு உட்கார ஒழுங்கு செய்ய வேண்டும் ஒரு தடவை அதிகபட்சமாக 100 பேர் மட்டும் தொழுகையில் பங்கு பெறலாம். ஆலயத்தில் உள்ள பணி மூட்டுகளை கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும். ஆலயத்திற்குள் கைகுலுக்கவோ, அருகில் நின்று பேசவோ மற்றும் பூங்கொத்து கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

ஆலயக் கதவுகள் ஜன்னல்கள் ஆராதனை நேரத்தில் திறந்து வைத்திருக்க வேண்டும். ஏசி பயன்படுத்தக் கூடாது. திருமண ஆராதனையில் 50 பேர் சமூக இடைவெளி விட்டு பங்கு பெற அனுமதிக்கப்படுகிறது. இந்த நெருக்கடியான காலகட்டம் கடந்து போக கடவுளிடம் மன்றாடுவோம். போதகர்கள் மற்றும் திருப்பணி விடையாளர்கள் சிறப்பு ஜெபங்கள் தவிர வீடு சந்திப்புகள் தவிர்ப்பது நலம் தொலைபேசியின் வழி சபையாரோடு நல்ல தொடர்புகளை வைத்துக் கொள்ளவும்.

சிறப்பு ஜெபங்களுக்கு செல்லும்போது போதகர்கள் அரசு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். சபை மக்களோடு சபை வீட்டில் தங்கி குடும்பமாக திருப்பணிவிடைகளை நிறைவேற்ற நினைவுபடுத்துகிறேன். அரசு எடுத்து வரும் அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கன்னியாகுமரி சிஎஸ்ஐ பேராயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply