கன்னியாகுமரி கடற்கரையில் கட்டிடம் கட்டுவதற்கு தடை கோரி வழக்கு கலெக்டருக்கு, மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் பகுதியை சேர்ந்த ஜான்மில்டன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் கன்னியாகுமரி முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இது 3 கடல்கள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் இடமாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக சூரிய உதயம்-மறைவு ஆகியவற்றை காண்பதற்குத்தான் சுற்றுலாப்பயணிகள் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரி கடற்கரை அருகே சன்செட் பஜார் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட நபர்கள் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். கடந்த ஆண்டு கடற்கரையின் அழகை மறைப்பதாக கூறி தற்காலிக கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. தற்போது கடற்கரை அருகே நிரந்தர கடைகள் அமைப்பதற்கான பணிகளை கன்னியாகுமரி பேரூராட்சி மேற்கொண்டு வருகிறது. இந்த கடைகள் கட்டப்பட்டால் கடற்கரையின் அழகு பாதிக்கப்படும்.

சுற்றுலாப்பயணிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும். எனவே கன்னியாகுமரி கடற்கரை அருகே நிரந்தரமாக கடைகள் கட்டும் பணிகளை நிறுத்தும்படி உத்தரவிட வேண்டும். கன்னியாகுமரி கடற்கரை அருகில் கட்டிடங்கள் கட்டுவதற்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “கடற்கரை பகுதியில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் 600 கடைகள் கட்டப்பட உள்ளது“ என தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டனர். மேலும், நிரந்தர கடைகள் அமைய உள்ள இடம் குறித்து கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் புகைப்படத்துடன் கூடிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை அக்டோபர் மாதம் 1-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply