அருமனை அருகே பரபரப்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்ட மாணவன் திடீர் சாவு அனைத்துக் கட்சியினர் போராட்டம்…!

அருமனை அருகே கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன், தொழிலாளி. இவருடைய மகன் அபினேஷ் (வயது 12), அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். அபினேசுக்கு கடந்த 5 நாட்களாக காய்ச்சல் இருந்தது. இதனால் மாணவனை அவரது பெற்றோர் கடையாலுமூடு சந்திப்பில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்கு பிறகு மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

ஆனாலும், அபினேசுக்கு காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து அதே ஆஸ்பத்திரியில் அபினேஷை உள்நோயாளியாக நேற்று முன்தினம் காலையில் சேர்த்தனர். ஆனால் அன்றைய தினம் மாலையில் அபினேஷ் திடீரென இறந்தார். இதனால், அபினேஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி அறிந்த கடையாலுமூடு பா.ஜனதா முன்னாள் கவுன்சிலர் மனோகரன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெரோம், மேல்புறம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிற்றார் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அனைத்து கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் நேற்று காலை ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.

பின்னர் அவர்கள், தவறான சிகிச்சை அளித்ததால் தான் மாணவன் இறந்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

நிலைமை விபரீதமாவதை அறிந்த கடையாலுமூடு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜின்னா பீர்முகமது தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். மேலும், தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தவறான சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கலைந்து செல்ல மறுத்தனர். மேலும் ஓமியோபதி படித்த டாக்டர், ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாகவும் குற்றம்சாட்டினர்.

போராட்டம் தீவிரமடைந்ததால் விளவங்கோடு தாசில்தார் ராஜ மனோகரன் ஆஸ்பத்திரியை பூட்டி சீல் வைத்தார். மேலும், இதுகுறித்து கடையாலுமூடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சிகிச்சையில் இருந்த மாணவன் திடீரென இறந்ததால் ஆஸ்பத்திரிக்கு ‘சீல்‘ வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply