அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் தளவாய்சுந்தரம் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு…!

குமரி மாவட்ட அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4-ந் தேதி (நாளை) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமையில் ரப்பர் தோட்ட தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே, அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் நிகார் ரஞ்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் வல்சகுமார், வேலப்பன் (சி.ஐ.டி.யு.), அனந்த கிருஷ்ணன், ஸ்ரீகண்டன் (ஐ.என்.டி.யு.சி.), ராஜேந்திரன் ( பி.எம்.எஸ்.) ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கை பற்றி கூறுகையில், “தற்போது கொரோனா காலமாக இருப்பதால் பணியாளர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்க வேண்டும். அதே சமயத்தில், சம்பளம் குறிப்பிட்ட காலத்திற்கு வழங்காததற்கு தொடர் எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்களுக்கு, ஊதியம் பிடித்தம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

கீரிப்பாறை தொழிற்கூடத்தில் தொழிலாளர்களின் அதிக வேலை பளுவை கைவிட வேண்டும். மாதந்தோறும் கலெக்டர் தலைமையில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்து அரசு ரப்பர் கழகத்தினுடைய வளர்ச்சிக்கான வழிகள் குறித்து ஆராய வேண்டும்“ என்றனர்.

பின்னர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைப்படி ஆகஸ்டு 2018-ம் ஆண்டு அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தியும், ஊக்க தொகைகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் கடந்த 17-2-2020 முதல் சம்பள உயர்வு கேட்டு காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது 24-3-2020 முதல் கொரோனா காலம் ஏற்பட்டு ஊரடங்கு அமலில் இருந்ததால் தோட்ட தொழிலாளர்களுக்கு முன் பணமாக தலா ரூ.5 ஆயிரம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டார். அதன் அடிப்படையில் முன்பணம் வழங்கப்பட்டது.

அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் நிகார் ரஞ்சன் தற்போது தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 7-ந் தேதி ஊதியம் வழங்கப்படும் எனவும், தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அதற்குரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். எந்தவொரு பிரச்சினையும் பேச்சுவார்த்தையின் மூலமாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் ரப்பர் கழகத்தின் வளர்ச்சிக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறது என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், அரசு ரப்பர் கழக மேலாளர் குருசாமி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், தொழிலாளர் தொடர்பு அலுவலர் ஸ்டீபன் கிரேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் பிரதிநிதி வல்சகுமார் தெரிவித்தார்.

Leave a Reply