கன்னியாகுமரி பூம்புகார் படகுத்துறையில் மணல் மேடுகள் அகற்றம்..!

புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகே மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் அமைந்துள்ளன. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இவற்றை படகில் சென்று பார்வையிடுகிறார்கள். இதற்காக தமிழக அரசின் நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக சார்பில் 3 படகுகள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது மேலும் ஒரு புதிய படகு கோவாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த 4 படகுகளும் படகுத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த படகுதளம் 50 ஆண்டுகளுக்கு மேலாக பழமையானதால் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே, ரூ.1 கோடி செலவில் புதிதாக படகுதளம் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் விரைவில் நிறைவு பெறும் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் படகுதளம் பகுதியில் மணல் மேடுகள் அதிகளவில் உருவாகி உள்ளது. அவற்றை அகற்றும் பணிகள் நேற்று தொடங்கியது. பொக்லைன் எந்திரம் மூலம் மணல் மேடுகள் அகற்றப்பட்டு வருகின்றன.

இந்த பணி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக மேலாளர் செல்லப்பா, துணை மேலாளர் சண்முகம் முன்னிலையில் என்ஜினீயர் ராஜ் மேற்பார்வையில் நடந்து வருகிறது. இந்த பணிகள் காரணமாக விவேகானந்தர் மண்டபம் பகுதியில் 2 படகுகளும், திருவள்ளுவர் சிலை பகுதியில் 2 படகுகளும் கடலில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply