மொபைல், லேப்டாப், வங்கிக் கணக்குகள் பாஸ்வேர்டு தேர்தெடுப்பதில் நீங்கள் தவிர்க்க வேண்டிய 8 விஷயங்கள்..!

இன்றைக்கும் நாம் வாழும் விதத்தை ஆன்லைன் வாழ்முறை என்று குறிப்பிடுகிறார்கள். அந்தளவுக்கு ஆன்லைன் உதவியின்றி ஒருநாளைக் கழிக்க முடியாது என்ற அளவுக்கு மாறிவிட்டது உலகம்.

நமது லேப்டாப்பில் வைத்திருக்கும் பாஸ்வேர்டைச் சொல்லச் சொன்னால் தடுமாறுவோம். ஆனால், டைப் செய்யுங்கள் எனும்போது டக்கென்று அடித்துவிடுவோம். அந்தளவுக்கு நம்மை அறியாமல் நமக்குள் பதிந்திருக்கிறது பாஸ்வேர்டு.

மொபைல், லேப்டாப், வங்கிக் கணக்குகள், மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களைச் செலுத்த உதவும் ஆப் என, ஒருநாளைக்கு ஐந்தாறு பாஸ்வேர்டுகளையாவது பயன்படுத்தும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

ஆனால், பலரும் பாஸ்வேர்டுகளைத் தேர்ந்தெடுப்பதில் போதிய கவனம் செலுத்துவதே இல்லை. இது உங்களைப் பாதுகாப்பற்ற சூழலுக்குத் தள்ளி விடும்.

திருடுபவர்கள் உங்களுக்குத் தெரிந்தவராகக்கூட இருக்கலாம். அதனால், அவர்கள் எளிதில் யூகித்து விடமுடியாத அளவுக்கு உங்கள் பாஸ்வேர்டு அமைய வேண்டும்.

உங்கள் பாஸ்வேர்டை எப்படி உருவாக்க வேண்டும் என்று தெரிந்துகொள்வதற்கு முன், பாஸ்வேர்டு உருவாக்கும்போது எதெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது மிக முக்கியமானது.

ஒன்று: பாஸ்வேர்டு உருவாக்கத்தில் குறைந்தது எட்டு கேரக்டர்ஸ் எனக் குறிப்பிட்டிருந்தால், நீங்கள் எட்டு கேரக்டர்ஸோடு நிறுத்திக்கொள்ள வேண்டாம்.

ஏனெனில், உங்கள் பாஸ்வேர்டைத் திருட முயல்பவர்கள் அது சுலபமாகி விடும். குறைந்த பட்ச எண்ணிக்கைதான் எட்டு. அதனால், 10- 14 கேரக்டர்ஸ் கொண்ட பாஸ்வேர்டு அமைத்துக்கொள்ளலாம்.

இரண்டு: பலரும் தங்கள் பிறந்த தேதி அல்லது தங்கள் பிள்ளைகளின் பிறந்த தேதியை பாஸ்வேர்டாக வைப்பார்கள். ஆனால், இது உங்கள் பாஸ்வேர்டை திருட நினைப்பவர்களுக்கு வேலையை ரொம்பவே எளிதாக்கி விடும்.

அது எப்படி எங்கள் பிறந்த நாள் தெரியும் எனச் சிலர் கேட்கக்கூடும். நீங்கள் சோஷியல் மீடியாவில் ஒவ்வொருவரின் பிறந்த நாளைக் கொண்டும் போட்டோக்களைப் போட்டு அசத்துகிறீர்கள். அதன்மூலம் எளிதாக பிறந்த நாளைக் கண்டுபிடித்துவிடலாம்.

மூன்று: பிறந்த நாளை வைப்பதுபோல தங்கள் பெயரையோ, பிள்ளைகளின் பெயரையோ பாஸ்வேர்டாக வைப்பார்கள். அதற்கு சொல்லும் காரணம், பாஸ்வேர்டு மறக்காமல் இருக்க வேண்டும் என்பது.

மறக்க கூடாது என்பது சரிதான். ஆனால், அது திருடப்படாமல் இருக்கவும் வேண்டும் அல்லவா. பிறந்த தேதியக் கண்டுபிடிப்பதுபோல இதையும் ஹேக்கர்ஸ் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள்.

நான்கு: தொடர்ச்சியான எழுத்துகள் அல்லது எண்களை பாஸ்வேர்டாக வைப்பதைத் தவிருங்கள். உதாரணமாக, 12345 என்றோ 54321 என்றோ abcdef என்றோ வைக்கக்கூடாது.

ஐந்து: upper case, lower case, number ஆகியவை இடம்பெற வேண்டும் என்பதை அந்த நிறுவனம் கட்டாயப்படுத்த வில்லை என்றால், எல்லாவற்றையும் lower case எழுத்துகளாக வைப்பதை கைவிட வேண்டும்.

அந்த நிறுவனம் வலியுறுத்தினாலும் இல்லாவிட்டாலும் பாஸ்வேர்டில் upper case, lower case, number ஆகியவை இருப்பதுபோல பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஆறு: ஏற்கெனவே பயன்படுத்திய பாஸ்வேர்டை அப்படியே திரும்பவும் பயன்படுத்த வேண்டாம். மேலும், ஒரே பாஸ்வேர்டை நீங்கள் பயன்படுத்தும் அனைத்துக்கும் வைத்துக்கொள்ள வேண்டாம்.

ஏழு: பாஸ்வேர்டில் ராசி பார்க்காதீர்கள். இந்த பாஸ்வேர்டு வைத்திருந்தபோது நல்ல விஷயங்கள் நடந்தன என்று ராசி பார்க்கும் பழக்கம் சிலருக்கு இருக்கிறது. இது சரியான வழிமுறை அல்ல.

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பாஸ்வேர்டுகளை மாற்றிக்கொண்டே இருப்பது அவசியம். இல்லையெனில், எளிதில் உங்கள் பாஸ்வேர்டு களவாடப் படும்.

பாஸ்வேர்டு
எட்டு: சோஷியல் மீடியாவில் நீங்கள் அளித்திருக்கும் விவரங்களைக் கொண்டு யூகித்துவிடக்கூடிய பாஸ்வேர்டுகளைத் தவிருங்கள். இது ரொம்பவே முக்கியமானது.

ஏனெனில், உங்களின் சொந்த ஊர், அப்பா பெயர், படித்த பள்ளி, நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் என தகவல்கள் அனைத்துமே அங்கிருந்தே எடுக்கப்படுகின்றன. எனவே இதில் கவனமாக இருங்கள்.

லேப்டாப், டெக்ஸ்டாப் என எங்கு நீங்கள் லாகின் செய்தாலும் வேலை முடிந்ததும் லாக் அவுட் கொடுக்க மறக்காதீர்கள்.

Leave a Reply