எச்.வசந்தகுமார் எம்.பி. மறைவு: நாகர்கோவில், கருங்கலில் மவுன ஊர்வலம் காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான எச்.வசந்தகுமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

அவருடைய சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வசந்தகுமாரின் உடல் அடக்கம் நடைபெற உள்ளது. இதற்காக அவருடைய உடல் சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு அகஸ்தீஸ்வரத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அவருடைய மறைவுக்கு தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினரும், பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளை சேர்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதேபோல் குமரி மாவட்டத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று நாகர்கோவிலில் வசந்தகுமாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மவுன ஊர்வலம் நடந்தது. முன்னதாக ஒரு ஜீப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த வசந்தகுமாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தின் முன்னால் வசந்தகுமார் உருவப்படம் தாங்கிய ஜீப் செல்ல, பின்னால் காங்கிரஸ், தி.மு.க.வை சேர்ந்தவர்கள் நடந்து சென்றனர்.

இந்த ஊர்வலத்துக்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், பிரின்ஸ் எம்.எல்.ஏ., குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ., ஆஸ்டின் எம்.எல்.ஏ., மாநகர தி.மு.க. செயலாளர் மகேஷ், வக்கீல் உதயகுமார், காங்கிரஸ் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மண்டல தலைவர் ஜெயச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் அந்தோணி, அகமது உசேன், கண்ணன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலம் மத்தியாஸ் வார்டு சந்திப்பு பகுதியில் உள்ள இந்திராகாந்தி சிலை முன்பு முடிவடைந்தது. அங்கு வசந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவரும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி.யுமான வசந்தகுமாரின் இழப்பு காங்கிரஸ் கட்சிக்கும், குமரி மாவட்ட மக்களுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் மிகப்பெரிய பேரிழப்பாகும். அவருடைய மறைவு நம்மை மிகப்பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சாதாரண குடும்பத்தில் இருந்து, இந்த மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட அவர் வியாபாரத்தில் மட்டுமல்ல, அரசியலிலும் உச்ச கட்டத்தை தொட்டுள்ளார் என்றால் அது மிகையாகாது.

2 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒருமுறை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். முழுக்க, முழுக்க மக்களின் பணியே தன்னுடைய வாழ்க்கையின் வழியாக கொண்டு செயல்பட்டவர். கொரோனாவின் கொடுமையான தாக்கத்தையும் கண்டு அவர் அஞ்சாமல் மக்களுக்கு செய்யக்கூடிய பணியே தனது ஜனநாயக கடமை என்று எண்ணி பணியாற்றியவர்.

பெருந்தலைவர் காமராஜர் இந்த மண்ணில் நாடாளுமன்றத்துக்கு போட்டியிட்டபோது பெருவாரியான வெற்றியை தேடித்தந்தது. அதேபோல் வசந்தகுமாருக்கும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெருமளவில் வெற்றியை தேடிக்கொடுத்தது இந்த மண். காமராஜரின் தீவிர விசுவாசியான வசந்தகுமார், அவருடைய பாணியில், அவருடைய நாமத்தைப்போற்றி, அவருடைய சீடராக, பக்தராக, வழித்தோன்றலாக இருந்து இந்த மண்ணுக்காக உழைத்தார். நாம் அவருக்கு செய்ய வேண்டிய கடமை, அவர் வழியில் மக்களுக்கு கடமையாற்றி, அவர் புகழை பாட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினரையும், கூட்டணி கட்சியினரையும் கேட்டுக் கொள்கிறேன். வசந்தகுமாரை இழந்து தவிக்கும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினருக்கும், மாவட்ட மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் வசந்தகுமார் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பிறகு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

வசந்தகுமார் எம்.பி. மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கருங்கலிலும் அனைத்துக்கட்சிகள் சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. இதற்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். கருங்கல் குறும்பனை சந்திப்பிலிருந்து தொடங்கிய மவுன ஊர்வலம் கருங்கல் காவல் நிலைய சந்திப்பு, ராஜீவ் காந்தி சாலை சந்திப்பு, பஸ் நிலையம் வழியாக காமராஜர் சிலை அருகே முடிவடைந்தது.

இந்த ஊர்வலத்தில் கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் டென்னிஸ், மாவட்ட துணை தலைவர் வக்கீல் பால் மணி, பொதுக்குழு உறுப்பினர்கள் டைட்டஸ், ஆஸ்கார் பிரடி, குமரி மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ததேயு பிரேம்குமார், கிள்ளியூர் வட்டார செயலாளர் டி.பி. ராஜன், குமரி மேற்கு மாவட்ட வர்த்தக பிரிவு அமைப்பாளர் சத்தியராஜ், கிள்ளியூர் யூனியன் தலைவர் கிரிஸ்டல் ரமணி பாய், மத்திகோடு ஊராட்சித்தலைவர் அல்போன்சா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply