கொரோனாவில் இருந்து குணமடைந்த 47 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வழங்கினார்…!

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நோய் தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் போலீசார் இருந்து வருகின்றனர். அவ்வாறு நோய் தொற்று பாதித்த போலீசார், சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி, தக்கலை அரசு ஆஸ்பத்திரி மற்றும் கொரோனா கவனிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகின்றனர்.

மேலும் அவர்களது கடமையை ஊக்குவிப்பதுடன், அவர்களை நேரில் அழைத்து பாராட்ட குமரி மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் வைத்து பணியின் போது கொரோனா பாதித்து மீண்ட போலீசாருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலந்து கொண்டார். மேலும் நோய் தொற்று ஏற்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று பணிக்கு திரும்பிய போலீசாரும் கலந்து கொண்டனர். நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய சப்-டிவிஷன்கள் மற்றும் ஆயுதப்படை என மொத்தம் 47 போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் போலீசார் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

போலீஸ் பணி என்பது மிக சிறந்த உன்னதமான பணி. கடமை உணர்வோடு பணியாற்றினால் மரியாதை, புகழ் தானாக தேடி வரும். கொரோனா காலத்திலும் கடமை உணர்ச்சியுடன் பணியாற்றிய அனைத்து போலீசாரையும் பாராட்டுகிறேன். நோய் தொற்று பாதித்து குணமடைந்த போலீசார், மறுபடியும் மக்கள் பணியில் ஈடுபடுவது பெருமைமிக்க செயல். மேலும் கொரோனா காலக்கட்டத்தில் பணியாற்றும் போலீசார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதையும் எதிர்கொள்ளும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு பால்ராஜ், நிலஅபகரிப்பு துணை சூப்பிரண்டு பீட்டர் பால்துரை, கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் உள்பட போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply