கன்னியாகுமரி அருகே ஸ்ரீகுபேர மூலிகை தியானமண்டபம் கலப்பை மக்கள் இயக்க தலைவர் திறந்து வைத்தார்…!

கன்னியாகுமரி அருகே உள்ள மருந்துவாழ்மலையை ஒட்டியுள்ள பொட்டல்குளம் அய்யன்மலையில் அய்யப்பசாமி கோவில் உள்ளது. இங்கு மக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டும் என்பதற்காகவும் தியானம், யோகா, மனவளர்ச்சி பெறுவதற்காகவும் கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், சினிமா டைரக்டருமான பி.டி. செல்வகுமார் ரூ.25 லட்சம் செலவில் ஸ்ரீகுபேர மூலிகை தியான மண்டபம் கட்டிக் கொடுத்து உள்ளார்.

இதன் திறப்புவிழா நேற்று நடந்தது. பொட்டல்குளம் ஸ்ரீகுபேர அய்யன்மலை அய்யப்பசாமி கோவில் ஸ்தாபகர் சித்தர் எம்.தியாகராஜசுவாமிகள் தலைமை தாங்கினார். நாகர்கோவில் புன்னைநகர் ஞானம் அறக்கட்டளை தலைவர் ஞானம் செல்வராஜ், கலப்பை மக்கள் இயக்க சட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகர்கோவில் கூட்டுறவு பயிற்சி நிலைய உதவி இயக்குனர் காப்பித்துரை வரவேற்று பேசினார். கலப்பை மக்கள் இயக்க மகளிர் அணி தலைவி பேராசிரியை ஸ்ரீரெங்கநாயகி குத்துவிளக்கேற்றி வைத்தார்.

விழாவில் கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்டு உள்ள ஸ்ரீகுபேர மூலிகை தியான மண்டபத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவின் தென் எல்லையான குமரியில் மேற்கு தொடர்ச்சிமலை தொடங்கும் இடமாக மருந்துவாழ்மலை உள்ளது. திருவிதாங்கூர் மன்னர்களும் சித்தர்களும் பயன்படுத்திய அபூர்வ மூலிகைகள் இந்த மலையில் உள்ளது.

இந்த மலையை ஒட்டியுள்ள பொட்டல்குளத்தில் 500 அடி உயரமுள்ள அய்யன்மலையில் மக்கள் நோய் நொடியின்றி வாழ ஸ்ரீகுபேர மூலிகை தியான மண்டபம் கட்டி உள்ளோம். இந்த மண்டபத்தில் தியானம், யோகா, மனவளர்ச்சி போன்றவை மேற்கொள்ளலாம். மேலும் மூலிகை நிறைந்த காற்றை சுவாசிக்கும் போது மனநிம்மதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் நமக்கு கிடைக்கும்.

இந்த மலையில் இருந்து வரும் காற்றில் 100 சதவீதம் ஆக்சிஜன் உள்ளது. இதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதற்காகத்தான் மருந்துவாழ்மலையை ஒட்டியுள்ள அய்யன்மலையில் இந்த தியான மண்டபம் கட்டப்பட்டு உள்ளது.

இன்று மக்கள் ஓய்வு இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கின்றனர். அவர்கள் மன அமைதியாக வாழ தியானம் அவசியம். அதற்காகத்தான் அபூர்வ மூலிகைகள் உள்ள இந்த மலையில் தியான மண்டபம் கட்டி உள்ளோம். இதனை மக்கள் நன்றாக பயன்படுத்தி நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும்.

இவ்வாறு பி.டி.செல்வகுமார் பேசினார்.

விழாவில் சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார், வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், காணிமடம் யோகிராம் சுரத்குமார் மந்திராலய நிறுவன தலைவர் பொன்காமராஜ்சுவாமிகள், பங்கு தந்தைகள் செல்வராயா ரூபன் (அழகப்பபுரம்), அமல்ராஜ் (ரஜகிருஷ்ணபுரம்), பீட்டர் பாஸ்டியன்(திருமூலநகர்), குமரி மாவட்ட அரசு தலைமை ஹாஜி அபுஸாவிஹ் ஆலீம், குமரி மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு பொருளாளர் ஷாபீக், பொதுச்செயலாளர் கான், அஞ்சுகிராமம் கேப் கல்வி நிறுவனங்களின் தலைவர் அய்யப்ப கார்த்திக், கலப்பை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் சிவபன்னீர்செல்வம், பேராசிரியர் ராமகிருஷ்ணமூர்த்தி,

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட துணைசெயலாளர் ஆர்.எஸ்.ராஜன், அய்யன்மலை பொறுப்பாளர்கள் அய்யப்பன், முத்தமிழ்செல்வன், மாவட்ட இளைஞரணி தலைவர் தனசேகர், இணையதள பொறுப்பாளர் கார்த்திக்ராஜா, பொன்தங்கராஜ், ஜாண்கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கார்த்திக் ராஜா நன்றி கூறினார். முன்னதாக குமரி மாவட்ட கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற சங்க செயலாளர் லட்சுமி கணேஷ் இறைவணக்கம் பாடினார்.

Leave a Reply