குழித்துறை பகுதியில் மனநலம் பாதித்த முதியவருக்கு உதவிய இளைஞர்களுக்கு பாராட்டு…!

குழித்துறை பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கிடந்த மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநிலத்தை சேர்ந்த முதியவரை கொரோனா பாதிப்பை கூட பொருட்படுத்தாமல் தூய்மைப்படுத்தி ஆஸ்பத்திரியில் சேர்த்த சமூக ஆர்வலருக்கு பாராட்டுக்கள் குவிகிறது. கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை மாவட்டத்தின் பல பகுதிகளில் மன நலம் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் சுற்றித்திரிவதை காணலாம்.

இவர்களில் பெரும்பாலானோர் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் . இந்த மன நோயாளிகள் ஒரே பகுதியில் இருக்காமல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வழியாக சுற்றி திரிந்து வருகின்றனர். மார்த்தாண்டம் அருகே குழித்துறை போஸ்ட் ஆபீஸ் ஜங்ஷன் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சுமார் 50 வயது மதிக்கத்தக்க வட மாநிலத்தை சேர்ந்த மன நோயாளி ஒருவர் அப்பகுதியில் சுற்றி திரிந்து வந்தார். இவருக்கு தினமும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உணவு வழங்கி வந்தனர்.

அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அவரை தாமிரபரணி ஆற்றில் அழைத்து சென்று குளிப்பாட்டி விட்டனர். அதை தொடர்ந்து, அவர் அவ்வப்போது அவரே ஆற்றில் சென்று குளித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இவர், பொதுமக்கள் கொடுக்கும் உணவை உட்கொள்வது கிடையாது. கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு படுக்கையில் கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

குழித்துறை பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து உள்ளதால் இந்த நோயாளியை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்க்க பலரும் தயக்கம் காட்டினர். இதை தொடர்ந்து சமூக சேவை செய்து வரும் கருங்கல் பகுதியை சேர்ந்த ஷிபு என்ற சமூக ஆர்வலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

சமூக சேவை பணியில் ஒத்துழைப்பு கொடுக்கும் இரு இளைஞர்களுடன் குழித்துறை வந்த ஷிபு மனநோயாளியை மீட்டு தலை முடியை வெட்டி, குளிப்பாட்டி, புது ஆடைகளை அணிவித்து அவரது வாகனத்தில் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தார். தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொரோனா பாதிப்பு காலத்தையும் பொருட்படுத்தாமல் தனது நண்பர்களுடன் வந்து மனித நேயத்துடன் செயல்பட்ட சமூக ஆர்வலர் ஷிபுவுக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply