குமரிக்கு படையெடுக்கும் மக்கள் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசல்…!

இ-பாஸ் தளர்வால் குமரிக்கு தினமும் ஏராளமானோர் வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர். இதனால், ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் முறை நடைமுறையில் உள்ளது. வெளியூர்களில் இருந்து இ-பாஸ் பெற்று குமரி மாவட்டத்திற்கு வருகிறவர்கள், எல்லையான ஆரல்வாய்மொழி, களியக்காவிளையில் தடுத்து நிறுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்படுகிறார்கள்.

இதன்மூலம் கொரோனா தொற்று உள்ளவர்கள் பலர் கண்டறியப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இ-பாஸ் பெற கடுமையான விதிமுறைகள் அமலில் இருந்ததால் ஏராளமானோர் தங்களின் பயணத்தை தவிர்த்து வந்தனர்.

தற்போது இ-பாஸ் பெறுவதில் தளர்வு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சிவப்பு மண்டல பகுதியில் இருந்து வருகிறவர்களுக்கு மட்டும் சளி பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால், வெளி மாவட்டங்களில் இருந்து குமரிக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆரல்வாய்மொழி பகுதியில் நேற்று காலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது. நெல்லை மாவட்டத்தில் இருந்து குமரிக்கும், இங்கிருந்து நெல்லைக்கும் ஏராளமானோர் வாகனங்களில் சென்றனர். முகூர்த்த தினம் என்பதால் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க பலர் வந்ததால் நேற்று வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது. இதனால், ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. அத்துடன் காலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குமரியில் இருந்து வெளியூர் செல்பவர்களின் இ-பாசை போலீசார் மட்டுமே சோதனை செய்கிறார்கள். ஆனால், வெளி மாவட்டங்களில் இருந்து வருகிற வாகனங்களின் இ-பாசை போலீசார், வருவாய்த்துறை, சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்கிறார்கள். எனவே, இதனால், அந்த வாகனங்கள் சோதனை சாவடியில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

Leave a Reply