பத்மநாபபுரம் நகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தவிர்க்க மூன்று இடங்களில் விழிப்புணர்வு முகாம்…!

பத்மநாபபுரம் நகராட்சி சார்பில் மக்கள் மத்தியில் உருவாகியிருக்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தவிர்க்க மூன்று இடங்களில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

கடந்த 151 நாட்களாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பத்மநாபபுரம் நகராட்சி பகுதியில் உள்ள பல ஊர்களில் வைரஸின் தொல்லை அதிகமானதால் 90 பேர் வைரஸ் தொற்றால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் 3 பேர் மரணம் ஆனார்கள்.

70 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். 17 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். வைரஸ் அச்சுறுத்தலை தவிர்க்கும் விதமாக தூய்மைப் பணி பிளீச்சிங் பவுடர் வீசுதல் கிருமிநாசினி அடித்தல் உள்ளிட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் செய்து வருகின்றனர். குறிப்பாக கடைகளில் தினந்தோறும் கிருமிநாசினி அடிக்கப்பட்டு வருகிறது.

தெருத்தெருவாக கிருமிநாசினி அடித்தால் சுகாதாரம் நன்றாக இருக்கும்மென பொதுமக்கள் தரப்பில் பேசப்படுகிறது. மேலும் தற்போது மாலை ஆனால் கொசுக்களின் தொல்லையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொசுத் தொல்லையை ஒழிக்கவும் நகராட்சி சுகாதாரத்துறையினர் சற்று கவனம் கொள்ள வேண்டும்.

வைரஸ் தொல்லையிலிருந்து மக்களை காக்க பத்மநாபபுரம் நகராட்சி சுகாதார துறை சார்பில் சரல் விளை, வாழவிளை, சாரோடு ஆகிய மூன்று ஊர்களில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு முகாம் ஆணையாளர் பெரி பெற்றி டெரன்ஸ் லியோன் தலைமையில் சுகாதார அலுவலர் ராஜாராம் முன்னிலையில் நடந்தது. இந்த மூன்று முகாமிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமில் காய்ச்சல் பரிசோதனையை பத்மநாபபுரம் மருத்துவ அலுவலர் லாரன்ஸ் விக்டர் ஜோ தலைமையிலான குழுவினர் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

முகாமில் பங்கேற்றவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை, கபசுரக் குடிநீர், நிலவேம்பு கசாயம் ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் சுகாதாரத்துறையினர் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை செய்தனர். இதில் சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம், மேற்பார்வையாளர் மோகன் தூய்மை இந்திய பணியாளர் சோபியா மற்றும் சுகாதாரத் துறையினர் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply